தமிழ்நாடு

tamil nadu

காஞ்சியில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

By

Published : May 1, 2020, 5:12 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கியுள்ள வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், வழங்கப்படும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் பணியினை, மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நிவாரண உதவிப் பொருகள் வழங்கும்  மாவட்ட ஆட்சியர் பொன்னையா
நிவாரண உதவிப் பொருகள் வழங்கும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த வட மாநிலத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய மாநில அரசு உத்தரவிட்டதன் பெயரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 ஆயிரத்து 873 வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் நலவாரியம் மூலமாக 17 ஆயிரத்து 883 பேருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 15 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீதமுள்ள 16 ஆயிரத்து 990 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என மாநில அரசிடம் மாவட்ட நிர்வாகம், கேட்டுக்கொண்டதற்கிணங்க முதலமைச்சர் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ஸ்ரீபெரும்புதூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் இருந்து தயார் செய்யப்பட்ட நிவாரண உதவிப் பொருட்களை ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சிவன்தாங்கல், வாலாஜாபாத் வட்டம், ஆட்டுபுத்தூர் பகுதிகளில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் சென்று வழங்கி, நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், "தமிழ்நாடு அரசின் சார்பில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் 15 ஆயிரத்து 976 பேருக்கு நிவாரணப் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை வழங்கும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

மேலும், வட மாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ள ஆரனேரி, மாம்பாக்கம் பகுதிகளில் சமுதாய உணவுக் கூடங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றின் மூலம் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சார் ஆட்சியர் சரவணன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையும் பார்க்க: 'தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பா?' - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details