ETV Bharat / state

'தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பா?' - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

author img

By

Published : May 1, 2020, 3:19 PM IST

சென்னை: நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

cabinet meeting
cabinet meeting

தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் நான்கு நாட்கள், முழு ஊரடங்கைப் பிறப்பித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாத மாவட்டமாக இருக்கிறது. அண்மையில், முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்குப் பின்னர், சில தொழிற்சாலைகளை இயக்க உத்தரவிடப்பட்டது. கரோனா வைரஸ் தொற்று குறைந்து உள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிறம் கொடுக்கப்பட்டது. இந்த ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் மாவட்டங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றும்படி மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனைகளை மேற்கொண்டார். இதில் மருத்துவக் குழு, தற்போதைய சூழலில் ஊரடங்கை தளர்த்த வேண்டாம் எனவும்; படிப்படியாக தொற்று இல்லாத இடங்களில் மட்டுமே ஊரடங்கை தளர்த்தவும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மே 3ஆம் தேதியுடன் முடியவுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து, நாளை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே மத்திய அரசு தொற்று இல்லாத மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், தொற்று பாதிப்பு இல்லாத இடங்களில் மட்டும் ஊரடங்கை தளர்த்துவது குறித்தும், தொழிற்சாலைகளை இயக்க அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கரோனா நெருக்கடி: ஒரு காரை கூட விற்பனை செய்ய முடியாத மாருதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.