தமிழ்நாடு

tamil nadu

டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கு - பீகார் மாநில இளைஞர் கைது

By

Published : Nov 6, 2021, 2:53 PM IST

ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் தொடர்புடைய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கு
டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் கடந்த மாதம் 4ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய திடீர் தாக்குதலில் டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்நிலையில் மற்றொரு டாஸ்மாக் ஊழியரான ராமு என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இது தொடர்பாக ஒரகடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள் உதவியோடு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இது தொடர்பாக வடக்கு மண்டல காவல் துறைத்தலைவர் சந்தோஷ்குமார் அறிவுறுத்தலின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் எம். சுதாகர் நேரடி மேற்பார்வையில் ஒரகடம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

குற்றவாளி கைது

இந்நிலையில் சிசிடிவி காட்சிகள், செல்போன் எண்களை வைத்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் ஒரகடம் தனிப்படை காவல் துறையினர் பீகார் மாநிலம் சென்று அம்மாநில காவல் துறையின் உதவியுடன் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் ஹவ்காரா கிராமத்தைச் சேர்ந்த உமேஷ்குமார் (25) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுத்தினர்.

பின்னர் அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படையினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் பாராட்டினார்.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டிக்கொலை

ABOUT THE AUTHOR

...view details