அத்தி வரதர் கோயில் குளத்தின் ரம்மியமான காட்சி காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்ற அத்தி வரதர் புகழ் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்தி வரதர் வைபவம் நடைபெறும். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியன்று கோயிலில் உள்ள அனந்த சரஸ் திருக்குளத்திலுள்ள நீராழி மண்டபத்தில் இருந்து ஆதி அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டு, பொதுமக்களின் தரிசனத்திற்காக சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் என 48 நாள்கள் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டார்.
அதையொட்டி சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை நேரில் தரிசித்துச் சென்றனர். பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதியன்று அத்தி வரதர் வைபவம் நிறைவு பெற்றதை அடுத்து, மீண்டும் அனந்த சரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் ஆதி அத்தி வரதர் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது வடகிழக்குப் பருவ மழையை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் எதிரொலியாக காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில், தற்போது அத்தி வரதர் விக்கிரகம் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் திருக்குளமானது மழை நீரால் முழுவதுமாக நிரம்பி மிக ரம்மியமாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக அத்தி வரதர் உள்ள நீராழி மண்டபத்தின் கோபுரத்தின் பாதியளவு மழை நீரில் மூழ்கி திருக்குளத்தின் ஐந்து படிகள் மட்டுமே வெளியே தெரிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2015ஆம் ஆண்டில் பெய்த வடகிழக்குப் பருவ மழைக்குப் பிறகு கடந்த 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2021ஆம் ஆண்டு அனந்த சரஸ் குளமானது மழை நீரால் முழுவதுமாக நிரம்பிய நிலையில் தற்போது தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டாக இவ்வாண்டும் அனந்த சரஸ் குளமானது மழை நீரால் முழுவதுமாக நிரம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"சலாம் கிடையாது.. நமஸ்காரம்தான்.." கோயில் வழிபாட்டு முறைகளை மாற்றிய அரசு..