தமிழ்நாடு

tamil nadu

வள்ளி கும்மி ஆட்ட உறுதிமொழி சர்ச்சை; கே.சி.சி பாலு அளித்த விளக்கம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 1:11 PM IST

Pledge Controversy Issue: வள்ளி கும்மி ஆட்டத்தில் கே.கே.சி பாலுவின் உறுதிமொழி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பெற்றோர் சம்மத்துடன் பெண்களுக்கு அறிவுரை வழங்கினேன் என்று கே.சி.சி பாலு விளக்கமளித்துள்ளார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொருளாளர் கே.கே.சி பாலு
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொருளாளர் கே.கே.சி பாலு

ஈரோடு:திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வட்டமலைப்புதூர் என்ற இடத்தில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதில், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு தங்கள் சமுதாயம் சார்ந்த மணமகனையே திருமணம் செய்து கொள்வோம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு, பெண்களிடம் மேடையில் உறுதிமொழி வாங்கினார். இதைத் தொடர்ந்து, இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பல்வேறு சமூக நீதி அமைப்புகள் இந்த சம்பவத்திற்கு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.வே.பொன்னையன், “நவீன காலத்தில் கல்வி வளர்ச்சியில் பெண்கள் மிகப்பெரிய அளவில் முன்னேறி இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் ஒரு வட்டத்திற்குள் நில்லுங்கள் என்று சொல்வது அறிவுக்குப் பொருத்தமற்றது. சமூக வளர்ச்சிக்கு எதிரானது” என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இந்த நிலையில், தொடர்ந்து எழுந்த கண்டனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொருளாளர் கே.கே.சி பாலு கூறியதாவது, “அழிவின் விளிம்பில் இருந்த வள்ளி கும்மியாட்டத்திற்கு கடந்த 2009ஆம் ஆண்டு கருமத்தம்பட்டி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநாட்டில் புத்துயிர் கொடுத்தனர். தற்போது கொங்கு மண்டலத்தில் இது ஜூரமாக பரவியுள்ளது.

கிராமங்களில் பெற்றோர், தங்கள் மகள்களுக்கு வரன்கள் பார்க்கும்போது பத்திரமாக இருங்கள் என்று பெற்றோர் சம்மத்துடன் அறிவுரை வழங்கினேன். இதில் வேறு எதுவும் கிடையாது. இதில் யாரையும் தவறாகக் கூறவில்லை. யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. இது தங்களை தற்காத்துக் கொள்ள ஒரு புதிய முயற்சி. ஆனால், இது தற்போது வேறு மாதிரியாக திரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும், “வள்ளி கும்மியாட்டம் ஒரு சமுதாயத்திற்கு சேர்ந்தது அல்ல. விருப்பப்பட்டால் அனைவரும் கற்றுக் கொள்ளலாம். உறுதிமொழியைப் பொறுத்தவரைக்கும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்பதற்காகவோ, யாரோ ஒருவரைத் தாக்க வேண்டும் என்பதற்காகவோ இதை செய்யவில்லை. எங்களது குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பைதான் சொல்லிக் கொடுத்தேன். இந்த விஷயம் தற்போது தவறாக சித்திகரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்

அதேபோல், ஒரு சமுதாயத்தினர் மட்டும் ஆடும் இந்த ஆட்டத்தில் பெண்களிடம், ‘இனம் சார்ந்த மணமகனையைத் தேர்வு செய்வோம்’ என்று உறுதி மொழியும், அனைத்து சமுதாய மக்களும் ஆடும் ஆட்டத்தில், ‘தாய் தந்தை சம்மதத்தின் பெயரில் திருமணம் செய்து கொள்வோம்’ என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வதாகவும், அதே நேரத்தில் வள்ளி கும்மியாட்டத்தில் ஆண்களிடம் ‘மதுபானமோ, புகைபிடிக்கவோ, சூதாடவோ மாட்டோம்’ என உறுதிமொழி எடுத்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:வள்ளி கும்மி ஆட்டத்தில் உறுதிமொழி சர்ச்சை விவகாரம்.. கே.கே.சி பாலு மீது பாயும் கேள்விக்கனைகள்!

ABOUT THE AUTHOR

...view details