தமிழ்நாடு

tamil nadu

தலைசிறந்த கல்வெட்டு ஆய்வு அறிஞரான புலவர் செ.ராசு காலமானார்!

By

Published : Aug 9, 2023, 2:31 PM IST

தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வெட்டு ஆய்வு அறிஞராக விளங்கிய புலவர் செ.ராசு (S Rasu) உடல் நிலை பாதிக்கபட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

தலைசிறந்த கல்வெட்டு ஆய்வு அறிஞரான புலவர் செ. ராசு காலமானார்
தலைசிறந்த கல்வெட்டு ஆய்வு அறிஞரான புலவர் செ. ராசு காலமானார்

தலைசிறந்த கல்வெட்டு ஆய்வு அறிஞரான புலவர் செ. ராசு காலமானார்

ஈரோடு:கொடுமணல் கிராமத்தில் மண்ணில் புதைந்து கிடந்த தமிழர்களின் பண்டைய நாகரீகங்களை தோண்டி எடுத்தவரும், தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வெட்டு ஆய்வு அறிஞராக விளங்கிய புலவர் செ.ராசு உடல் நிலை பாதிக்கபட்டு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 9) காலமானார். அவருக்கு வயது 85. இந்த நிலையில், இவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஈரோடு பெருந்துறை சாலையில் புதிய ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த புலவர் செ.ராசு, கடந்த 1938ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வெள்ளமுத்து கவுண்டன்வலசு என்னும் ஊரில் பிறந்தார். இவர் திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லூரியில் வித்வான் பட்டத்தை முடித்தார்.

அத்துடன் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டங்களை பெற்ற இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். ஈரோட்டில் தமிழாசிரியர் பணியைத் தொடங்கி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார்.

பிறகு, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கல்வெட்டு தொல்லியல் துறையில் துறை தலைமை பொறுப்பை ஏற்று திறம்பட ஆய்வுப் பணியை மேற்கொண்டு வந்தார். கல்வெட்டறிஞர், பேரூராதீன புலவர், கல்வெட்டியல், கலைச்சம்மல், திருப்பலிச் செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புதிய ரயில்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தென்காசி மக்கள்.. நிறைவேற்றுமா மத்திய அரசு?

எழுத்து மற்றும் களப்பணிகளில் ஆர்வம் மிகுந்த இவர் கல்வெட்டு, செப்பேடு, சுவடு உள்ளிட்ட புதிய தகவல் கிடைத்தால் அதை விரைந்து செய்தியாகவோ, கட்டுரையாகவோ வெளி உலகிற்கு வழங்குபவர். இவரின் முயற்சியினால் பல கல்லூரிகளில் தொல்லியல் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது என்பது இவரது சிறப்பான செயல்பாடுகளுக்கு எடுத்துக்காட்டு. மேலும் 1,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரச்சலூர் இசை கல்வெட்டை கண்டுபிடித்து உலகிற்கு வெளிப்படுத்தியவர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.

மேலும், இந்தியாவில் இதுவே முதலாவது இசை கல்வெட்டாகும். தென்னிந்தியாவின் மிக அரிதான பாடலுடன் கூடிய பழமங்கலம் நடுகல் கண்டறிந்ததும் இவரே. இந்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தரும், தொல்லியல் அறிஞரான செ.ராசு வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

அரச்சலூர் இசைக் கல்வெட்டை கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்திய இவர், அது கொடுமணல் அகழாய்வில் ரோமானியர்களுடன் தொடர்புடையது என்பதையும் வெளிப்படுத்தியவர். இவரது மறைவிற்கு தமிழ் அறிஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:இந்தியாவில் காவல்துறை சித்திரவதை தடுக்கப்பட வேண்டும்: வழக்கறிஞர் ஹென்றி டிபேன்!

ABOUT THE AUTHOR

...view details