பழனி கோயிலில் கால் இடறி தடுமாறிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்! திண்டுக்கல்:பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (07.05.23) சென்றிருந்தார். ரோப் கார் மூலமாக மலைக்கோயிலுக்கு சென்ற அமைச்சர், ரோப்காரில் இருந்து சுமார் 20 படிக்கட்டிகள் ஏறிச் சென்று உச்சியை அடைந்தார்.
அப்போது அங்கு போடப்பட்டிருந்த கால்மிதி(Mat) தடுக்கியதில் கால் இடறிய நிதி அமைச்சர் சுதாரித்துக் கொண்டார். பின்னர் சிறிது நேரம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று பின்னர் ஆனந்த விநாயகரை கும்பிட்டு விட்டு, ராக்கால பூஜையில் மூலவரை காண உள்ளே சென்றார்.
நிதியமைச்சர் பிடிஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். இந்த ஆடியோ விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கட்சியின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்திலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சாமி தரிசனத்திற்காக பழனி சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அங்கும் தடங்கலை சந்தித்து இருக்கிறார். நிதி அமைச்சர் பழனி கோயிலுக்கு வரும் போதெல்லாம் தடங்கல் ஏற்பட்டு வருகிறது. கடந்த முறை பழனி கோயிலுக்கு நிதி அமைச்சர் வருகை தந்த போது திடீரென மின்சாரம் தடை பட்டு ரோப் காரில் சிறிது நேரம் அந்தரத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், நிதி அமைச்சர் முதல்வரை நேரில் சந்தித்து ஆடியோ குறித்த விளக்கம் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே அரசியலில் பல்வேறு தடங்கல்களை சந்தித்து வரும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு தீவிர முருக பக்தர் ஆவார். இந்நிலையில் பழனி கோயிலிலும் அவர் தொடர்ந்து தடங்கல்களை சந்தித்து வருகிறார்.
இதையும் படிங்க: கைதிகள் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது பாயும் அடுத்தடுத்த வழக்குகள்!