தமிழ்நாடு

tamil nadu

பழனி மலைக்கோயிலுக்கு செல்லும் மின் இழுவை ரயிலில் மோசடி - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 8, 2021, 6:35 AM IST

மின் இழுவை ரயிலுக்காக காத்திருக்கும் மக்கள்

பழனி மலைக்கோயிலுக்கு செல்லும் மின் இழுவை ரயில் நிலையத்தில் நடக்கும் மோசடியை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மேலே செல்ல ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகியவை இயங்கி வருகின்றன. கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் இழுவை ரயில், தற்போது இயங்கி வருகிறது.

காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை இந்த ரயிலுக்கு டிக்கெட் வழங்கி பொதுமக்கள் மலைக்கோயிலுக்கு மேலே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மலைக்கோயிலுக்கு மேலே செல்ல 10 ரூபாய், 50 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மின் இழுவை ரயில் நிலையத்தில், பொதுமக்கள் வரிசையாகச் சென்று டிக்கெட் வாங்கும் நுழைவாயிலை மாலை 4 மணிக்கே கோயில் நிர்வாகம் சார்பில் அடைக்கப்பட்டதால்‌ மலைக்கோயிலுக்கு மேலே செல்ல காத்திருந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

கோயில் நிர்வாகிகளுடன் வாக்குவாதம்

இந்நிலையில் மின் இழுவை ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயில் வழியாக அதிக பணம் பெற்றுக்கொண்டு பக்தர்களை அனுமதித்ததாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மின் இழுவை ரயில் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “பழனி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யவரும் பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோர் எளிதாக மலைக்கோயில் மேலே செல்ல மின் இழுவை ரயில் பெரும் பயனாக உள்ளது.

10 ரூபாய் டிக்கெட் வழங்குவதே இல்லை. வேறுவழியின்றி ஒரு நபருக்கு 50 ரூபாய் கொடுத்து மேலே செல்லும் நிலையில், மின் இழுவை ரயிலுக்கு டிக்கெட் எடுக்கும் வரிசையின் நுழைவாயிலை மாலை 4 மணிக்கே அடைத்துவிட்டனர். வரிசையில் காத்திருந்தவர்கள் இது குறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை.

கொந்தளித்த பொதுமக்கள்

அலுவலர்களின் அனுமதியோடு, இடைத்தரகர்கள் மூலம் வரும் பக்தர்களிடம் அதிக பணம் வசூலித்துக்கொண்டு பிரதான நுழைவாயில் வழியாக மின் இழுவை ரயிலில் அனுப்புகின்றனர். மேலும் தனியாக வரும் நபர்களுக்கு 500 ரூபாய் என்றும், கூட்டமாக வரும் பக்தர்களுக்கு குறைந்த விலையில் பேக்கேஜ் உள்ளதாகவும் கூறி இடைத்தரகர்கள் மூலம் அலுவலர்களும் சேர்ந்து கொள்ளையடிக்கின்றனர்.

ஏற்கனவே 10 ரூபாய் டிக்கெட் வழங்காமல் 50 ரூபாய் டிக்கெட் மட்டும் வழங்கி, கோயிலின் வருவாயைப் பெருக்கும் நோக்கத்துடன் கோயில் நிர்வாகம் செயல்பட்டுவரும் நிலையில், தற்போது மின் இழுவை ரயில் நிலைய டிக்கெட் வரிசையை அடைத்துவிட்டு, ஆயிரக்கணக்கான ரூபாயை வசூலித்துக் கொண்டு கொல்லைப்புற வழியில் பக்தர்களை அனுமதித்து, ஏழை பக்தர்களை தவிக்க விட்டு வருகின்றனர்.

மின் இழுவை ரயிலுக்காக காத்திருக்கும் மக்கள்

இடைத்தரகர்களுடன் கூட்டுவைத்துக்கொண்டு கொள்ளையடிக்கும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பக்தர்கள் நேரடியாக மலைக்கோயிலுக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நீலகிரி மலை ரயில் முன்பதிவுடன் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details