தமிழ்நாடு

tamil nadu

'ஸ்டாலின் தான் வருங்கால முதலமைச்சர்' - கே.பாலகிருஷ்ணன் உறுதி

By

Published : Apr 3, 2021, 5:49 PM IST

வருகின்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும், ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், K BALAKRISHNAN
CPIM STATE SECRETARY K BALAKRISHNAN PRESS MEET IN DINDIGUL

திண்டுக்கல்: தெய்வசிகாமணிபுரத்தில் உள்ள சி.ஐ.டி.யூ அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், "நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி, தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இரண்டு ஆண்டிற்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. ஆனால், கட்டடப் பணிகளுக்கு இன்றளவும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை.

பாரதிய ஜனதா கட்சி தென் மாவட்டங்களுக்கு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் இன்றளவும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. தென்மாவட்டங்கள் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி உள்ளது. இங்குள்ள இளைஞர்கள் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் போன்ற ஊர்களுக்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், வேலைவாய்ப்பிற்காகவும் சேது கால்வாய்த் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், இதனை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று மோடி கூறிவருகிறார். ஆனால், அரவக்குறிச்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பொதுமேடையில் திமுக கூட்டணி வேட்பாளருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கோயம்புத்தூரில் யோகி ஆதித்யநாத் வருகையின்போது பாஜகவினர் ஊர்வலமாகச் சென்ற போது, அவ்வழியே உள்ள கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். இது அராஜகப் போக்கு இல்லையா?. அதிமுகவின் பணவிநியோகத்தை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. மாறாக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அவர்களது வீடுகளிலும், உறவினரின் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்துகின்றனர்.

என்னதான் அழுத்தம் கொடுத்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு என்றே தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதில் முதல் வழக்காக வனத்துறை அமைச்சர் சீனிவாசனின் வழக்கு விசாரிக்கப்படும். திண்டுக்கல் சீனிவாசன் வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தேர்தல் ஆணையம் தடுக்காவிட்டாலும், இந்தத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதி மக்கள் சீனிவாசனுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும். திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்பார்" என்றார்.

இதையும் படிங்க:திண்டுக்கல் பெயரளவில் மட்டுமே மாநகராட்சி அந்தஸ்து பெற்றுள்ளது - ஐ.பெரியசாமி

ABOUT THE AUTHOR

...view details