திண்டுக்கல்: நிலக்கோட்டையில் தேர்தல் பணிக்குழு சிறப்பு முகாம் நேற்று (அக்.4) இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தேன்மொழி சேகர், ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன், நல்லதம்பி, பேரூர் கழக செயலாளர்கள் நிலக்கோட்டை சேகர், அம்மையநாயக்கனூர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை பொதுச் செயலாளரும், திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "அதிமுக கூட்டணியில் இருந்த பிஜேபி விலகிச் சென்றதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதிமுக வெற்றிக்கு பிஜேபி தடையாக இருந்தது. பிஜேபி அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் நாம் இப்போது வெற்றி நடை போட்டு வருகிறோம். பிஜேபி இருந்தது, காலில் ஒரு கட்டையை கட்டிக்கொண்டு ரேஸில் ஓடியது போல் இருந்தது.
அதிமுக வெற்றிக்கு பொதுமக்கள், தொண்டர்கள் சரியாக உள்ளனர். நமது வெற்றி இலக்குக்கு இடையூறாய் இருந்தது பிஜேபி ஒன்று மட்டும்தான், அந்தத் தடையும் இன்று நீக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அதிமுக வெற்றியை தடுப்பதற்கு எந்த கொம்பனாலும் முடியாது.
இரண்டு ஆண்டுகள் கூட அரசியல் அனுபவம் இல்லாத கத்துக்குட்டி அரசியல்வாதியை வைத்துக்கொண்டு எல்லாத்தையும் தெரிந்தது போல் இருந்து கொண்டு ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, கடைசியில் நம்மை கடித்துவிட்டார். கூட்டணியில் இருந்து கொண்டு புரட்சித்தலைவி அம்மாவை விமர்சனம் செய்கிறார். கூட்டணி தர்மத்தை தெரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டார்.
அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகாவது, அவர் திருந்துவார் என்றால் திருந்தவில்லை. மேலும் நமது நிறுவனத் தலைவர் அண்ணாவை விமர்சனம் செய்து வருகிறார். இந்த தைரியத்தை அவருக்கு கொடுத்தது யார்?. தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில், பிஜேபி தலைவர் அண்ணாமலை செய்து வருகிறார்.