கொடைக்கானலில் குற்றங்களை தடுக்க கூடுதல் போலீஸ் - காவல்துறை துணை தலைவர்
திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதிகளில் குற்றங்களை தடுக்க கூடுதல் காவல்துறையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமி கொடைக்கானல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “கொடைக்கானலில் காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. கூடுதல் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிர் காவல் நிலையம் புதிதாக அமைப்பதற்கும், கொடைக்கானலில் சப் ஜெயில் இயங்குவதற்கும் பரிந்துரை செய்யப்படும். சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் முக்கிய பகுதியாக இருக்கும் ஏரிசாலை முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மலைப்பகுதியில், நக்சல் தீவிரவாதிகள் ஊடுருவாமல் கண்காணிப்பதற்கு கிராம மக்களிடையே ஆலோசனைக்குப் பிறகு கூடுதல் போலீசார் நியமிக்கபடுவார்கள்.
கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் கஞ்சா, போதை காளான் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கஞ்சா விற்ற 27 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
பின்னர் கொடைக்கானல் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தார். இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் முருகன் ஆகியோர் உடனிருந்தார்.