தமிழ்நாடு

tamil nadu

'திமுகவைச் சேர்ந்த 38 எம்.பி.க்களும் டம்மி தான்' - பிரேமலதா விஜயகாந்த்

By

Published : Jul 3, 2022, 6:53 PM IST

பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

'திமுகவைச் சேர்ந்த 38 எம்.பி.க்களும் டம்மி தான், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் பிரச்னைக்காக தேமுதிக என்றும் போராடும்' என தர்மபுரி போராட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தர்மபுரி:தேமுதிக சார்பில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாளையம்புதூர், அகரம், தொப்பூர் கணவாய் உள்ளிட்டப் பகுதிகளில் விபத்துகளைத் தடுப்பதற்கு மேம்பாலம் அமைக்க வேண்டும், காவிரி ஆற்றில் வீணாக சென்று கடலில் கலக்கும், காவிரி உபரிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாளையம் புதூர் பேருந்து நிறுத்தத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைக் குறைப்பதற்கு உடனடியாக மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் விவசாயம் செழிக்க காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் விஜயகாந்த், “தமிழ்நாட்டில் அதிமுக, திமுக மாறி மாறி 50 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வருகிறார்கள். இந்த இரண்டு கட்சிகளும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிந்து செயல்படுத்துவதில்லை. திமுக கடந்த தேர்தலில் ஏராளமான அறிக்கையை கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்த திட்டங்களையும் மக்களுக்கு நிறைவேற்றவில்லை.

பெண்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை. அம்மா உணவகத்தை மூடிவிட்டனர். தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். இப்படி மக்களுக்குத்தேவையான எந்த திட்டங்களையும் செய்யாமலும் தேர்தல் அறிக்கையில் கொடுத்த திட்டங்களை நிறைவேற்றாமலும் இருந்து வருகின்றனர். திமுகவில் 38 எம்.பி.க்கள் இருப்பதாக மார்தட்டி கொள்கிறார்கள்.

ஆனால், அந்த 38 பேரும் டம்மியாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விமானத்தில் சென்று வருவதற்காக மட்டுமே இருந்து வருகிறார்கள். இவர்கள் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்தியில் பேசுவார்களா அல்லது ஆங்கிலத்தில் பேசுவார்களா? இவர்களுக்கு எதுவுமே தெரியாது. தேமுதிகவை விமர்சனம் செய்யக்கூடிய தகுதி, இவர்கள் யாருக்குமே கிடையாது.

பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தர்மபுரி மாவட்டத்தில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் உடனடியாக மேம்பாலங்களை அமைத்து விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றி விவசாயத்திற்கான தண்ணீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் பரிசல் தொழிலை நம்பியே தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 பரிசல்களுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். அதனை உடனடியாக விசாரணை செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எரிந்த பரிசல்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தேமுதிக மக்களுக்காக போராடிக் கொண்டே இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க:ராகுல் காந்தி ஈபிஎஸ் உடன் தொலைபேசியில் பேசியதாக வெளியான செய்தி தவறானது - ஜெய்ராம் ரமேஷ் மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details