தமிழ்நாடு

tamil nadu

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த எம்பி செந்தில்குமார் மனு

By

Published : Feb 11, 2022, 5:18 PM IST

தருமபுரி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதிகளில் சோலார் பேனல்கள் பொருத்த வேண்டும் எனக் கடந்த ஆண்டு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து கோரிக்கைவைத்த நிலையில் மீண்டும் சந்திப்பில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்வி செந்தில்குமார் அறிவுறுத்தினார்.

எம்.பி. செந்தில்குமார்
எம்.பி. செந்தில்குமார்

தருமபுரி:தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமைப் பொது மேலாளர் தமிழ்நாடு பொறுப்பு அலுவலரை, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்வி செந்தில்குமார், டெல்லியில் சந்தித்து தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு சார்ந்த கோரிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தார்.

இந்தியாவிலேயே அதிகமாக விபத்து நடக்கும் தருமபுரி NH44 அமைந்திருக்கும் தொப்பூர் கணவாய் பகுதியில் இருக்கும் அபாயகரமான வளைவுகளை மக்கள் நலன்கருதி, மறுசீரமைப்புச் செய்திட வேண்டும் எனத் தொடர்ச்சியாக வற்புறுத்திவந்த நிலையில் அதற்கான விரிவான திட்ட அறிக்கை, மதிப்பீடுகள் தற்போது தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சீரமைப்புத் திட்டங்கள் கைவசம்

இப்பகுதி சாலை சீரமைப்புக்கு மூன்று திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதில் உயர்மட்ட பாலம் அமைத்து சாலை அமைத்தல், ஏற்கனவே இருக்கும் நான்கு வழிச்சாலையை எட்டு வழிச் சாலைக்காக விரிவுப்படுத்துதல், சுரங்கப் பாதை அமைத்தல் இவற்றில் உரிய முறையைத் தேர்ந்தெடுத்து சாலைப் பணிகளை வேகமாக முடித்து விபத்துகள் கட்டுக்குள் கொண்டுவர அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை என்.ஹெச். 544 தருமபுரி தொகுதிக்குள்பட்ட மேட்டூர் சாலை தொப்பூர் பவானி வரையிலான சாலையைப் போக்குவரத்து நெரிசல் காரணமாக விரிவாக்கம், வலுப்படுத்த வேண்டும்.

மார்ச் இறுதியில் பணி தொடக்கம்

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அலுவலரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டு இருந்ததன் விளைவாக, சாலை விரிவாக்கப் பணிகள் ஒப்புதல் நிலையை இறுதிக் கட்டத்தில் உள்ளன.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திலிருந்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பிரிவுக்கு சாலை விரிவாக்கம், வலுப்படுத்த நிதி வழங்கப்பட்டது. மேலும், இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்ட அவையும் மாதம் மார்ச் இறுதியில் வழங்கப்பட்டு பணிகள் துரிதமாகத் தொடங்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஹிஜாப் விவகாரத்தை பெரியளவில் எடுக்க வேண்டாம் - உச்ச நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details