தமிழ்நாடு

tamil nadu

அத்திப்பள்ளி பட்டாசு விபத்து.. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கர்நாடகா அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 9:06 PM IST

Firecracker Explosion: கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு கடை விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை கர்நாடகா அரசு அதிகாரிகள் வழங்கினர்.

அத்திப்பள்ளி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடகா அரசு சார்பில் காசோலை
அத்திப்பள்ளி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடகா அரசு சார்பில் காசோலை

அத்திப்பள்ளி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடகா அரசு சார்பில் காசோலை

தருமபுரி: தமிழக - கர்நாடகா மாநில எல்லைகளான ஜூஜூவாடி, அத்திப்பள்ளி பகுதியில் 30க்கும் அதிகமான பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை படுஜோராக நடைபெறும். அந்த வகையில், ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில், ராமசாமி ரெட்டி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அவரது மகன் நவீண் என்பவர் பட்டாசு கடை அமைத்துள்ளார்.

தீபாவளி பண்டிகை காலங்களில் மட்டும் பட்டாசுகளை விற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் வேலைக்கு என அழைத்துவரப்படுவதும், பண்டிகை முடிந்ததும் கூலியுடன் இலவசமாக பட்டாசுகளை வாங்கிச் செல்வதும் வழக்கமான நடைமுறையை கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில், அடுத்த மாதம் தீபாவளி என்பதால் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 5 பேர், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த 10 பேர் என 30 பேர் வரை, நவீணின் பட்டாசு கடையில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது அந்த பட்டாசு கடையில் எதிர்பாராத விதமாக கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த T.அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடப்பன், ஆதிகேசவன், இளம்பருதி, விஜயராகவன், ஆகாஷ், கிரி, சச்சின் என ஏழு பேர் மற்றும் நீப்பதுரை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (அக். 28) T.அம்மாபேட்டை கிராமத்திற்கு வந்த கர்நாடகா மாநிலம் ஆனைக்கல் தாலுகாவை சேர்ந்த தாசில்தார் என்.ஆர் கரியநாயக், ஆர்.ஐ சித்தராஜ், வி.ஏ.ஓ நாகராஜ் உள்ளிட்டோர், ஒவ்வொரு வீடாக சென்று உயிரிழந்த நபர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தலா 5 லட்ச ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர். இதில், அரூர் வட்டாட்சியர் கனிமொழி, ஆர்.ஐ பொன்மணி, வி.ஏ.ஒ அம்பேத்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பட்டாக்கத்தியுடன் ரகளை செய்த போதை ஆசாமி.. இருவருக்கு வெட்டு - பதைபதைக்கும் காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details