தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த நவலை கிராமத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்பவர் பிரசவத்திற்காகத் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
கீர்த்தனாவுக்குப் பிரசவம் முடிந்ததையடுத்து இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக டியூப் பொருத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.30 மணியளவில் கீர்த்தனாவின் உடல் நார்மல் ஆனதை அடுத்து மருத்துவர், உபாதை கழிக்கும் டியூப்பை வேகமாகக் கலட்டி கட்டிலின்மேல் வீசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்போது வலி தாங்க முடியாமல் கீர்த்தனா அலறிய சத்தத்தைக் கேட்ட உறவினர்கள் மருத்துவரிடம் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறீர்கள் என்றும் இவ்வாறு டியூப்பை குழந்தைக்கு அருகிலேயே வீசினால் குழந்தைக்கு நோய்த் தொற்றுகள் ஏற்படாதா என்றும் கேட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவர்கள் தர்ணா
இதற்கு கோபமடைந்த மருத்துவர் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் என சுமார் 60க்கும் மேற்பட்டோருடன் இங்கு மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் நோயாளிகளின் உறவினர்கள் தங்களைக் கடுமையான சொற்களால் திட்டித் தாக்க முயற்சிசெய்கின்றனர் எனவும் பிரசவ வார்டுக்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்துவந்த நகர காவல் ஆய்வாளர் சரவணன் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்களைக் கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
தாய்மார்கள் அவதி
இந்தத் தர்ணா போராட்டத்தின்போது பிரசவ வார்டில் இருக்கும் பெண்களுக்கு உறவினர்கள் உணவு கொண்டு வந்தபோது அங்கிருந்த மருத்துவமனை காவலர்கள் யாரையும் அனுமதிக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்தனர்.
சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தர்ணா இரவு 11 மணி அளவில் முடிவுக்குவந்து மருத்துவர்கள் கலைந்துசென்றனர். இதனால் நோயாளிகள் அவதிப்பட்டுவருவதாக மருத்துவமனையில் உறவினர்கள் பெரும் கவலையுடன் தெரிவித்தனர். இரவு கலைந்துசென்ற மருத்துவா்கள் மீண்டும் இன்று காலைமுதல் தா்ணாவில் ஈடுபட்டுவந்த நிலையில், கல்லூரி முதல்வர், காவல் துறையினா் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.