தமிழ்நாடு

tamil nadu

திமுகவில் இருந்து விலகலா? - காமெடி பண்ணாதீங்க; தருமபுரி எம்.பி ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 1:32 PM IST

DMK MP Senthilkumar: திமுகவில் இருந்து எம்.பி செந்தில்குமார் விலகுவதாக இணையதளங்களில் வெளியான செய்தி குறித்து, ஈடிவி பாரத்திற்கு அவர் பிரேத்யேகமாக தகவல் அளித்துள்ளார்.

DMK MP Senthilkumar
தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார்

தருமபுரி: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி. செந்தில்குமார் திமுகவில் இருந்து விலகுவதாக சில செய்தி நிறுவனங்களில் செய்தி வெளியாகி இருந்தது. தற்போது இந்த சர்ச்சை இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து தருமபுரி எம்பி செந்தில்குமார் ஈடிவி பாரத் தமிழ் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து, ஈடிவி பாரத் சார்பில் தருமபுரி எம்பி செந்தில்குமாரிடம் கேட்டபோது, "சமூக வலைதளத்தில் மற்றும் ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தவறானது. வேண்டுமென்று உள்நோக்கத்துடன் இதுபோன்ற போலி செய்திகளை பதிவிட்டு வருகிறார்கள். தவறான செய்தியை வெளியிட்ட அந்த செய்தி நிறுவனம் மீது வழக்கறிஞர்கள் மூலம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இருக்கிறேன் என்றார்.

உங்கள் மீது ஏன் இது போன்று உண்மைக்கு மாறான செய்திகள் வெளி வருகிறது என்ற கேள்விக்கு, தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு அதிகளவு திட்டங்களையும், நிதிகளையும் பெற்று கொடுத்திருக்கிறேன். நாடாளுமன்ற வருகையில் 100% கலந்து கொண்டு இருக்கிறேன். பல விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.

தருமபுரி மக்கள் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பல முயற்சிகளை செய்து, பல்வேறு திட்டங்களை தருமபுரி தொகுதி மக்களுக்கு கொண்டு வந்திருக்கிறேன். மக்களிடம் நல்ல பெயர் இருக்கிறது. ஆகையால் சிலர் வேண்டுமென்றே இது போன்று பதிவிடுகிறார்கள் என கூறினார்.

உங்களைப் பற்றி வெளியான செய்திக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, போலி செய்திகளுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த முறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு நில அளவை பணிகள் எல்லாம் முடிந்திருக்கிறது.

மலை கிராம மக்களுக்கு சாலை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. சிறப்பான ஆட்சி நடைபெறும் இத்தருணத்தில் சிலர் தவறான உள்நோக்கத்துடன் செய்திகளை பரப்புகிறார்கள். அதனை நாம் கண்டு கொள்ளாமல் நகைச்சுவையாக ரசித்து விட்டு செல்ல வேண்டும்" என சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

தற்போது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் டி.என்.வி. செந்தில்குமார் திமுக தலைமையின் குட் லிஸ்டில் இருப்பதால், இதுபோல அடிக்கடி எம்.பி பற்றிய செய்தி வைரலாவதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எண்ணூர் அமோனியா வாயு கசிவு: அனைத்து ஆலைகளிலும் தணிக்கை மேற்கொள்ள அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details