ETV Bharat / state

எண்ணூர் அமோனியா வாயு கசிவு: அனைத்து ஆலைகளிலும் தணிக்கை மேற்கொள்ள அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 12:37 PM IST

Ennore Gas Leak Issue: எண்ணூர் உர ஆலையில் அமோனியா வாயுக்கசிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Ennore Gas Leak Issue
எண்ணூர் வாயுக்கசிவு

சென்னை: எண்ணூரை அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் அப்பகுதியில் உள்ள சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய கிராமங்களில் கடுமையான நெடி பரவி வருகிறது.

அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. வாயுக்கசிவால் 30க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, "எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா வாயு கொண்டு வருவதற்காக குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் ஆகும். எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது.

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து வாயுக்கசிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல என்றும், கடந்த காலங்களில் இதேபோல் பல முறை வாயுக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்றால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அங்குள்ள மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதே பாதிப்பை கோரமண்டல் நிறுவனமும் ஏற்படுத்தியதாகத் தான் கருத வேண்டியிருக்கும். இது குறித்து மாசுக்கட்டுபாட்டு வாரியமும், காவல்துறையும் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எண்ணூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வேதி ஆலைகளில் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் தேர்ச்சி பெறாத ஆலைகளின் செயல்பாடுகளை, அவை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.

எண்ணூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அமோனியா வாயுக்கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசு உடனடியாக சரி செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு முன் வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எண்ணூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்புமணி ராமதாஸ் மருத்துவ பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.