தமிழ்நாடு

tamil nadu

இலவச வீடு வழங்க லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்றத் தலைவர்? - மாற்றுத்திறனாளி தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்!

By

Published : Jul 29, 2023, 2:19 PM IST

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே மாற்றுத்திறனாளி தற்கொலைக்கு காரணமான கொக்கரப்பட்டி பஞ்சாயத்து தலைவரை கைது செய்யக்கோரி, உயிரிழந்த நபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி
dharmapuri

தருமபுரி:அரூர் அருகே கொக்கராப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(35) மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணமாகி சுகுணா, என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேல், வசிக்கும் வீடு சேதம் அடைந்தது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று உத்தரவாதம் கொடுத்து வந்துள்ளார். சேதமடைந்த வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்த பழனிவேல், கொக்கரப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிமாறனிடம் தங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுள்ளார். அரசு தொகுப்பு வீடு வழங்க லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அப்போது கூறப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொக்கராப்பட்டி பகுதியில் தொடர் மழை பெய்ததால் சேதமடைந்த வீட்டில் தங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பழனிவேல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள நியாய விலை கடை வளாகத்தில் தங்கியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் அங்கு சென்று, பழனிவேல் மற்றும் குடும்பத்தினரை சமாதானப்படுத்தினார். இதையடுத்து குடும்பத்தினருடன் வீட்டுக்கு திரும்பிய பழனிவேல் சேதமடைந்த வீட்டை சீரமைக்க முடியவில்லையே என்று மன வேதனையில் இருந்துள்ளார். மீண்டும் பஞ்சாயத்து தலைவர் மணிமாறனிடம் வீடு வழங்க வற்புறுத்தி உள்ளார்.

அதற்கு பஞ்சாயத்து தலைவர் பழனிவேல் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் இருந்த பழனிவேல் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கோபிநாதம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பழனிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு கொடுக்கும் தொகுப்பு வீட்டை மக்களின் பயன்பாட்டிற்கு கொடுப்பதற்கு லஞ்சம் கேட்டது மட்டுமல்லாமல் அவதூறான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மாற்றுத்திறனாளி பழனிவேல் மன உளைச்சல் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நியாயம் கிடைக்க வேண்டி கொக்கராப்பட்டி பஞ்சாயத்து தலைவர் மணிமாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அவரது உறவினர்கள் அரூர் ஊராட்சி ஒன்றியத்தை முற்றுகையிட்டனர். பின்பு முக்கிய பிரதான சாலையான ரவுண்டானாவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்பே போராட்டத்தை கைவிட்டு விலகி சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:வங்கக் கடலில் சிக்கி தவித்த 36 தமிழக மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை!

ABOUT THE AUTHOR

...view details