ETV Bharat / state

வங்கக் கடலில் சிக்கி தவித்த 36 தமிழக மீனவர்களை மீட்ட இந்திய கடற்படை!

author img

By

Published : Jul 29, 2023, 12:37 PM IST

வங்கக் கடலில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 36 பேர், இந்திய கப்பற்படையைச் சேர்ந்த கஞ்ஜார் கப்பலின் உதவியால் மீட்கப்பட்டுள்ளனர்.

வங்கக் கடலில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்களை மீட்டது இந்திய கடற்படை!
வங்கக் கடலில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்களை மீட்டது இந்திய கடற்படை!

சென்னை: வங்கக் கடலில் தமிழ்நாடு கடற்கரையில் இருந்து 130 கடல் மைல் தொலைவில் தத்தளித்த 36 இந்திய மீனவர்களை இந்திய கடற்படைக் கப்பல் ‘கஞ்ஜார்’ (khanjar) பத்திரமாக மீட்டு உள்ளது. மூன்று மீன்பிடி கப்பல்களில் இருந்த மீனவர்கள், சவாலான கடல் சூழ்நிலையில் 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ஐஎன்எஸ் கஞ்ஜார் கப்பலின் உதவியால் மீட்கப்பட்டு உள்ளனர்.

சபரிநாதன், கலைவாணி மற்றும் வி.சாமி ஆகியோருக்கு சொந்தமான மூன்று படகுகளில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 36 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளனர். இந்த நிலையில், கடலில் திடீரென கொந்தளிப்பு ஏற்படவே, மீனவர்கள் அதில் சிக்கி உள்ளனர். அப்போது வங்காள விரிகுடாவில் இந்திய கப்பற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் கஞ்ஜார் கப்பல் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்து உள்ளது.

இதனிடையே, மோசமான வானிலை, எரிபொருள் இல்லாமை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையால் மீனவர்கள் இரண்டு நாட்களாக கடலில் தத்தளித்து உள்ளனர். அது மட்டுமல்லாமல், தங்களது படகுகளில் இயந்திர செயலிழப்பு போன்ற தொழில்நுட்ப சிக்கல்களையும் அவர்கள் சந்தித்து இருந்தனர். சுமார் 48 மணி நேரத்துக்கும் மேலாக மீனவர்கள் கடலில் சிக்கித் தவித்ததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் மிகவும் அச்சத்துடன் இருந்து வந்து உள்ளனர்.

மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மூன்று படகுகள் கடலில் சிக்கி உள்ளதை அறிந்த இந்திய கப்பற்படை, அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்த பிறகு, இந்திய கப்பற்படையைச் சேர்ந்த கஞ்ஜார் கப்பலின் உதவியுடன் மீன்பிடி கப்பல்களுக்குத் தேவையான வசதிகளை அளித்து, அவற்றை 30 மணி நேரத்திற்கும் மேலாக இழுத்துச் சென்று, நேற்று (ஜூலை 28) சென்னை துறைமுகத்திற்கு அந்த படகுகள் பாதுகாப்பாகத் திரும்பியதை உறுதி செய்தது.

இதனால், மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் மகிழ்ச்சியை நெகிழ்ச்சி உடன் வெளிப்படுத்தினர். மேலும், இது போன்ற சவாலான சூழலில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை உடனடியாக எந்த வித தொழில்நுட்ப தடையும் இன்றி வழங்குவதற்கு அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ஐஎன்எஸ் (INS) கஞ்ஜார் கப்பல் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குக்ரி வகை ஏவுகணை கார்வெட் கப்பல் ஆகும். இது தற்போது இந்திய கடற்படையில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு- பத்ரி சேஷாத்ரி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.