தமிழ்நாடு

tamil nadu

தைவான் பல்கலை மேற்படிப்புக்கு இரண்டு அரசுப் பள்ளி மாணவிகள் தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2023, 7:20 AM IST

Updated : Nov 26, 2023, 11:15 AM IST

Minister Anbil Mahesh Poyyamozhi: தைவானின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தில் இந்தியாவைச் சார்ந்த 3 மாணவிகள் மேற்படிப்பிற்காக தேர்ந்தெடுக்கபட்ட நிலையில், அதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 அரசுப் பள்ளி மாணவிகள் என்பது பெருமையளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Minister Anbil Mahesh Poyyamozhi
அமைச்சர் அன்பில் மகேஸ்

தருமபுரி: தருமபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி கலை அரங்கில், தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் சங்கம் இணைந்து ஆசிரியர்களுடன் 'அன்பின் நம்மில் ஒருவர்' என்னும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார். முன்னதாக பல்வேறு தலைப்புகளில் தொடக்க கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அறிவொளி, பேராசிரியரும், பேச்சாளருமான பர்வீன் சுல்தான் ஆகியோர் உரையாற்றினர்.

பின்னர் சிறப்புரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, “தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் களஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதற்கெல்லாம் ரோல் மாடல் நமது தலைமை ஆசிரியரான தமிழக முதலமைச்சர்தான். ஆசிரியப் பெருமக்கள் இரவு பகல் பாராமல் திட்டமிட்டு உழைத்து வருகின்றனர். ஆனால், கல்வியாண்டு இறுதியில் அந்த பள்ளியில் எவ்வளவு தேர்ச்சி விகிதம் பெற்றது என்பது நமக்கான அளவுகோளாக அமைக்க வேண்டும்.

அதற்காக நீங்கள் அங்கீகாரம் பெற வேண்டுமானல், பின்தங்கியுள்ள நிலையில் உள்ள தருமபுரி மாவட்டம் தேர்ச்சி சதவிகிதம் மாநில அளவில் 15 மாவட்டத்திற்குள் வருவதற்கு, நீங்கள் முழுக்கவனம் செலுத்த வேண்டும். தமிழக முதலமைச்சர் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு வெறும் கல்வியை மட்டும் போதிக்காமல், நாட்டு நடப்பு பற்றியும் சொல்லித் தர வேண்டும். கல்வியில் பின்தங்கிய என்ற வார்த்தையே வரக்கூடாது என நினைப்பவர், நமது தமிழக முதலமைச்சர். வளர்ச்சி பெற்ற மாவட்டங்களாக உருவாக்குவதே நமது லட்சியம் என நினைப்பவர்.

அதற்கு உதாரணம், தைவானின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தில் இந்தியாவைச் சார்ந்த 3 மாணவிகள் மேற்படிப்பிற்காக தேர்ந்தெடுக்கபட்ட நிலையில், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவிகள் தேர்தெடுக்கபட்டுள்ளனர். அதில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 1 மாணவி என்பது மிகவும் பெருமைக்குரியது. இதற்கு முழு காரணம் ஆசிரியர்கள்" என தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்ரமணி மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழீழ மாவீரர்கள் தினத்தில் சமூக நீதி காவலர் வி.பி.சிங்கிற்கு சிலை திறப்பு! - முதலமைச்சர் திறந்து வைப்பு!

Last Updated :Nov 26, 2023, 11:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details