தமிழ்நாடு

tamil nadu

கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான 10 ஆம் வகுப்பு மாணவி - போக்சோவில் கைதான 4 சிறார்கள்!

By

Published : Jul 8, 2022, 10:21 PM IST

கடலூரில் 10 ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 4 சிறார்களை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான 10 ஆம் வகுப்பு மாணவி - போக்சோவில் கைதான 4 சிறார்கள்!
கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளான 10 ஆம் வகுப்பு மாணவி - போக்சோவில் கைதான 4 சிறார்கள்!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து பொதுத்தேர்வில் தோல்வியடைந்த 17 வயது மாணவர், கடந்த மே மாதம் 22 ஆம் தேதி சக மாணவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதில் 10 ஆம் வகுப்பு மாணவி உள்பட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மாணவர், அம்மாணவியுடன் சேர்ந்து செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார்.

இதற்கிடையில் மாணவியுடன் 10 ஆம் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவர், “பிறந்தநாள் விழாவில் நீ அவனுடன் (17 வயது மாணவர்) எடுத்த புகைப்படம் என்னிடம் உள்ளது. உனது வீட்டில் அதனை கொடுத்து விடுவேன். இதை உன் வீட்டில் தரக்கூடாது என்றால், நான் கூப்பிடும் இடத்துக்கு நீ வர வேண்டும்” என மாணவியிடம் கூறியுள்ளார்.

எனவே கடந்த 1 ஆம் தேதி, பள்ளி உணவு இடைவேளையின் போது அந்த மாணவி, பள்ளியின் பின்பகுதியில் உள்ள மாணவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டுக்குள் மாணவி சென்றவுடன் மிரட்டல் விடுத்த அந்த மாணவர், உள்பக்கமாக கதவை பூட்டியுள்ளார். மேலும், உள்ளே மாணவியுடன் 10 ஆம் வகுப்பு படித்து வரும் மேலும் இரண்டு மாணவர்களும் இருந்துள்ளனர்.

தொடர்ந்து அந்த மூன்று மாணவர்களும் சேர்ந்து மாணவியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து, அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த 3 மாணவர்களும், தாங்கள் எடுத்த வீடியோவை சென்னைக்கு வேலைக்காகச் சென்ற மாணவருக்கு தெரியும் வகையில் அனுப்ப முடிவு செய்து இருக்கிறார்கள்.

ஆனால் அவரிடம் சாதாரண வகை செல்போன் மட்டுமே இருந்ததால், அவருடன் இருக்கும் மற்றொருவரின் செல்போனுக்கு வீடியோவை அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ விவகாரம் மேலும் ஒரு மாணவருக்கு தெரிய வந்துள்ளது. அந்த மாணவரும், மாணவியிடம் சென்று தன்னிடம் வீடியோ உள்ளது என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது தாயிடம் கூறி, இனி பள்ளிக்கு படிக்கச் செல்லவில்லை என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய், ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து வந்து விசாரித்தனர்.

மேலும் அவர்களது செல்போனை சோதித்த போது ,அதில் மாணவியின் புகைப்படம் மற்றும் வீடியோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று மாணவர்கள் மற்றும் இதற்கு தூண்டுதலாக இருந்த முன்னாள் மாணவர் என நான்கு பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையில் சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், பிரச்னைக்குரிய பள்ளி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து கைதான நான்கு பேரும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவரது தாயுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி விளையாடிய கணவர்- கண்டித்த மனைவி படுகொலை

ABOUT THE AUTHOR

...view details