தமிழ்நாடு

tamil nadu

Neet: கடலூரில் நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி திடீர் தற்கொலை!

By

Published : Apr 6, 2023, 12:23 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நீட் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்த மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEET
நீட்

கடலூர்: நெய்வேலி டவுன்ஷூப் பகுதியில் வசித்து வருபவர் உத்திராபதி. என்எல்சி ஒப்பந்த தொழிலாளரான இவருக்கு நிஷா(18) என்ற மகள் இருந்தார். நெய்வேலியில் உள்ள பள்ளியில் படித்த நிஷா கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்தார். 12ஆம் வகுப்பில் 399 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அதில் போதிய மதிப்பெண்கள் எடுக்காததால் அவரால் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லை.

அதனால், நிஷாவின் பெற்றோர் நீட் தேர்வு பயிற்சிக்காக, நெய்வேலி அருகே உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். அங்கு கடந்த ஓராண்டாக நிஷா பயிற்சி பெற்று வந்தார். வரும் மே மாதம் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு நிஷா தயாராகி வந்ததாக தெரிகிறது. இதற்காக அந்த பயிற்சி மையத்தில் தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த தேர்வுகளிலும் குறைவாகவே மதிப்பெண்கள் எடுத்து வந்ததால், நிஷா மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று(ஏப்.5) வகுப்பு இல்லாதபோதிலும், வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு நெய்வேலியில் இருந்து பேருந்து மூலம் வடலூருக்கு சென்றார். வடலூர் ரயில் நிலையம் அருகே, மாலை ஐந்து முப்பது மணி அளவில் தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு தோல்வி காரணமாகவும், தேர்வு குறித்த அச்சத்தாலும் மாணவ மாணவிகள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. அடுத்த மாதம் நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், நெய்வேலியில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான தீர்வு அல்ல. தற்கொலை குறித்து உங்களுக்கு எண்ணம் தோன்றினால் உடனடியாக ஸ்நேகா தற்கொலை தடுப்பு மையம் - 044 24640050 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள்.

இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சத்தில் மாணவர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details