தமிழ்நாடு

tamil nadu

பாதுகாப்பற்ற ரயில்வே பாலம்... பொறுப்பை தட்டிக் கழிக்கும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வேத்துறை... எம்.பி புகார்

By

Published : May 19, 2023, 6:19 PM IST

பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ரயில்வே பாலத்தை சரி செய்யாமல் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வேத்துறை மாறி மாறி கைக்காட்டி பொறுப்பை தட்டிக் கழிப்பதாக கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்

Etv Bharat
Etv Bharat

கோவை: சிவானந்தா காலனியில் இருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலை வழியில் உள்ள ரயில்வே பாலம் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆனால் நெடுஞ்சாலைத்துறையும், ரயில்வே துறையும் மாறி மாறி கைகாட்டி பாலத்தை சரி செய்யாமல் நழுவுகிறார்கள். இந்த பாலத்தால் பெரும் விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு சரி செய்ய வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, ”கோவை - மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து, சிவானந்தா காலனி செல்லும் சாலையில் இரண்டு ரயில்வே பாலங்கள் உள்ளன. இந்த பாலத்தின் கீழே செல்லும் உயரம் அதிகமான வாகனங்களை எச்சரிக்கை செய்ய இருபுறமும் இரும்பு தடுப்பு பொருத்தப்பட்டிருந்தது.

தற்போது ஒரு பாலத்தின் கீழே இருந்த இரும்பு தடுப்பு அகற்றப்பட்டு சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், உயரத்தை கணக்கிடாமல் வரும் கனரக வாகனங்கள் பல நேரங்களில், பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றன.

மேலும், இரண்டு ரயில்வே பாலங்களிலும் ரயில்கள் செல்லும் போது ரயில்வே பெட்டிகளில் இருந்து கழிவுகள் கீழே கொட்டாமல் இருக்க இரும்பு தகடு பொருத்தப்பட்டு இருக்கும். தற்போது, அவை இல்லாததால் கழிவுகள் கொட்டி வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். எனவே, உயரத்தை கணக்கிடும் தடுப்பு அமைத்திட வேண்டும்.

பாலத்தின் கீழே ரயில் பெட்டி கழிவுகள் கொட்டாதவாறு இரும்பு தகடுகள் பொருத்தப்பட வேண்டும் என சேலம் கோட்டம் தென்னக ரயில்வே அதிகாரிக்கு 09-01-2023 அன்று கடிதம் எழுதினேன். அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தாலும், தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்ததாலும், 26-04-2023 அன்று, ரயில்வே முதுநிலை பொறியாளரின் கவனத்திற்கு எனது உதவியாளர் கொண்டு சென்றார்.

மேலும், அப்பகுதியில் பெரிய விபத்து ஏற்படும் முன் அதிகாரிகளை நேரில் அழைத்து உரிய நடவடிக்கை எடுத்திட கேட்டு கோவை வடக்கு முதுநிலை பொறியாளரை (குணசேகரன்) அழைத்து இப்பிரச்சனை குறித்து பேசினேன்.

அவர் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலத்தின் அடியில் சாலை போடப்பட்டதன் காரணமாக பாலத்திற்கும், சாலைக்குமான ஏற்கனவே இருந்த இடைவெளியை குறைத்து விட்டார்கள். இதனால், அந்த வழியாக வழக்கமாகச் செல்லும் உயரம் கொண்ட வாகனங்கள், தற்போது செல்ல முடிவதில்லை.

எனவே, வாகனங்கள் மோதி பாலத்திற்கு முன் இருந்த இரும்பு தடுப்பு உடைந்து விட்டது என்றும், மேலும் கடந்த 24-1-2022 அன்று நெடுஞ்சாலைத்துறை கோவை வடக்கு உட்கோட்டத்தை சேர்ந்த உதவி மண்டல பொறியாளர் (சோழவளத்தான்) சாலை போட அனுமதி கேட்டு தென்னக ரயில்வே, சேலம் கோட்டம், மண்டல பொறியாளருக்கு (மேற்கு) கடிதம் எழுதியிருந்ததாகவும், அதற்கு தென்னக ரயில்வே கோவை வடக்கு முதுநிலை பொறியாளர், சாலை போட அனுமதி மறுத்து 2-02-2022 அன்று கடிதம் எழுதியதாகவும், தங்கள் எதிர்ப்பையும் மீறி மாநில நெடுஞ்சாலை துறை சாலை அமைத்து இடைவெளியை குறைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

அதன் பிறகு எனது நேர்முக உதவியாளர் 8-05-2023 வடக்கு உட்கோட்ட உதவி மண்டல பொறியாளரை நேரில் சந்தித்து பிரச்சனையை விளக்கினார். ஆனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி அவர்கள் அந்த குறிப்பிட்ட இடத்தில் சாலை ரயில்வே துறைக்கு சொந்தமானது, அவர்கள் வேண்டுமானால் தேவையான அளவு இடைவெளியை அதிகரித்துக் கொள்ளலாம், எங்களுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார்.

மேலும், இதுகுறித்து ரயில்வே துறைக்கு நான் கடிதம் எழுத உள்ளேன் என்றும், "சாலை அமைத்தது நெடுஞ்சாலை துறை தான். அதை அவர்கள் தான் சரி செய்ய வேண்டும். நாங்கள் செய்ய இயலாது" என தெரிவித்துள்ளார்.
அந்த பாலத்தை கடக்கும் பொதுமக்கள் தினந்தோறும் அவதிப்படுகின்றனர். அதிக உயரம் கொண்ட வாகனங்கள் அவ்வழியே வந்தால் பாலத்தின் அடியில் சிக்கிக் கொள்ளவும் அல்லது ரயில்வே பாலத்தின் மீது மோதவும் வாய்ப்பு உள்ளது.

இதனால், ரயில்வே பாதைக்கும் ஆபத்து உள்ளது. ஆனால், இரண்டு துறைகளும் மாறி மாறி கைகாட்டி கொண்டு பொறுப்பை தட்டிக் கழிக்கின்றனர். அந்த வழியே செல்லும் ரயில் பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த அச்சுறுத்தல் உள்ளது. ஆகவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் தலையீடு செய்து பெரும் விபத்து ஏற்படும் முன்பு பாலத்தை சரி செய்ய வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - அண்ணாமலை

ABOUT THE AUTHOR

...view details