ETV Bharat / state

தமிழ்நாடு ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - அண்ணாமலை

author img

By

Published : May 19, 2023, 4:05 PM IST

தமிழ்நாடு ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - அண்ணாமலை

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அண்ணாமலை, தனது காளையை அழைத்து வந்தார்.

மேலும் மண்டபத்திற்கு பாஜக கட்சியினர் அழைத்து வந்த ஜல்லிக்கட்டு காளைகளை பார்வையிட்டார். அதன் பின்னர் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க கண்காட்சியை அண்ணாமலைப் பார்வையிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அண்ணாமலை, ”பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகள் வெற்றிகரமாக மக்களுக்கு சேவை செய்துவிட்டு, பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அதை வருகின்ற மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு பாஜக கொண்டாட உள்ளது.

பிரதமரின் சாதனைகள், அதனால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பயன்கள், மக்கள் எப்படி முன்னேறி உள்ளார்கள், அரசின் திட்டங்கள் பட்டிதொட்டி எல்லாம் எவ்வாறு சென்றுள்ளது என்பதை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் ஒரு மாதம் காலம் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் வந்துள்ளனர். நானும் எனது காளையைக் கொண்டு வந்துள்ளேன். அதற்குக் காரணம், நேற்று உச்ச நீதிமன்றம் சரித்திரம் வாய்ந்த தீர்ப்பை பிரதமர் மோடியின் முழு முயற்சியால் வழங்கியுள்ளது. அதனைக் கொண்டாட ஜல்லிக்கட்டுக் காளைகளை கொண்டு வந்துள்ளோம்.

தமிழகம் முழுவதும் நாளை மாவட்டத் தலைநகரங்களில் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கள்ளச்சாராயம் பட்டி தொட்டி எங்கும் புழங்க ஆரம்பித்ததன் வெளிப்பாடாக தான் விழுப்புரம் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தைப் பார்க்கிறோம். இந்த ஆர்ப்பாட்டம் மாநில அரசிற்கு எச்சரிக்கை மணியாக இருக்கும்.

ஒரு பக்கம் டாஸ்மாக்கில் வெள்ளம் போல சாராயம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அதற்கு அடிமையானவர்கள் கள்ளச்சாராயத்தின் பக்கம் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த இரண்டையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

வருகின்ற 21ஆம் தேதியன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை ராஜ்பவனில் சந்தித்து, கள்ளச்சாராயம் விஷயத்தில் நேரடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாஜகவினர் மனு அளிக்க உள்ளோம். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும். அவரை நீக்கக்கோரி முதலமைச்சருக்கு அறிவுறுத்த வேண்டும் என மனு அளிக்க உள்ளோம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர முடியாது. அவரை நீக்க ஆளுநர், முதலமைச்சருக்கு வலியுறுத்த வேண்டும். டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. டாஸ்மாக்கில் தறிகெட்டு ஓடும் குதிரை போல எல்லா பக்கமும் மது ஓடிக் கொண்டிருப்பதை கட்டுப்படுத்த வேண்டும். திமுக அரசு, தமிழ்நாட்டை குடிகார மாநிலமாக மாற்றுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். டாஸ்மாக்கை கட்டுப்படுத்தினால், கள்ளச்சாராயம் கட்டுப்படுத்தப்படும்'' எனத் தெரிவித்தார்.

பின்னர் கட்சியினர் மத்தியில் பேசிய அண்ணாமலை, ''2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது பாஜகவுக்கு பலப்பரீட்சை. எல்லா தீய சக்திகளும் ஒரு அணியில் திரண்டுள்ளனர். பாஜகவினர் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். இன்றிலிருந்து நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு ஆரம்பித்து விட்டது.

மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக நாம் மாறப் போகிறோம். அதற்கான அடிப்படை பணியை பிரதமர் செய்து வருகிறார். இந்தியாவின் பொருளாதாரம் உயர உயர, தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறைகிறது, மற்ற மாநிலங்கள் முன்னேறி வருகிறது. அதனால், தமிழ்நாடு பின்னோக்கி செல்கிறது.

மே 30 முதல் ஜூன் 30 வரைக்கும் பிரதமரின் நலத்திட்டங்களை பெரிய இயக்கமாக மக்களிடம் எடுத்துச் செல்கிறோம். பாஜக ஆட்சிக்கு வந்த போது இந்தியாவில் 18 ஆயிரம் கிராமங்களில் மின்சாரம் இல்லை. ஆனால், இப்போது மின்சாரம் இல்லாத கிரமமே கிடையாது. இந்திய சரித்திரத்தில் மிக அமைதியான வாழ்க்கையினை நாம் வாழ்ந்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது - கார்த்திகேய சிவசேனாபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.