கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குறிப்பாகக் கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் காட்டு யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகளால் விவசாயப் பயிர்கள் சேதமாகி வருவதனால் நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையிடம் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். யானைகளால் ஒரு சில இடங்களில் மட்டும் சேதம் ஏற்பட்டாலும், காட்டுப் பன்றிகளால் அதிகளவிலான சேதங்கள் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
குறிப்பாகக் கோவை வனக் கோட்டத்தில் தடாகம், பெரிய நாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் காட்டுப் பன்றிகளால் நாள்தோறும் விவசாய பயிர்கள் சேதமாவதால் காட்டுப் பன்றிகளை வனத்துறையினர் கட்டுப்படுத்தக் கோரி மனுக்களை அளித்தும் அடையாள ஆர்ப்பாட்டங்களிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில், கேரள மாநிலத்தில் விவசாய பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவதற்காகச் சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டிலும் விவசாய பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் தமிழ்நாடு வன உயிரின மோதல் தடுப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட வன அலுவலர்கள் தலைமையில் விவசாயிகள் சார்பில் ஒருவர் பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டு அக்குழுவினர் வன விலங்குகளால் ஏற்படும் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்குழுவினர் கேரள மாநிலம் பாலக்காடு சென்று அம்மாநில அரசு காட்டுப் பன்றிகளை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்தும், அம்மாநில வனத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், "தமிழ்நாடு தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் இக்குழு கேரள மாநிலம் பாலக்காடு சென்றது. வனத்துறை உயர் அதிகாரிகள், குழு உறுப்பினர்களான விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.