தமிழ்நாடு

tamil nadu

வீட்டிற்குள் புகுந்து 100 சவரன் நகை, ரூ.2.50 கோடி பணம் திருட்டு - குற்றவாளிகள் கைது!

By

Published : May 3, 2023, 7:50 PM IST

கோயம்புத்தூரில் கணவரை இழந்து தனியாக வீட்டில் வசித்து வந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து கோடிக்கணக்கில் பணம், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்புலியகுளம் பகுதி கிரீன் பீல்டு காலனியைச் சேர்ந்தவர், ராஜேஸ்வரி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் மூலம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வர்ஷினி என்பவர் அறிமுகமாகி உள்ளார். பின்னர் வர்ஷினி அடிக்கடி ராஜேஸ்வரி இல்லத்திற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்த வர்ஷினி, ராஜேஸ்வரி தூங்கிய பின்பு வீட்டிலிருந்த சுமார் 80-100 சவரன் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள், இரண்டரை கோடி ரூபாய் பணம் ஆகியவற்றைத் திருடிக் கொண்டு அவருக்கு தெரிந்த அருண்குமார் மற்றும் நவீன்குமார் ஆகியோருடன் தப்பிச்சென்றுள்ளார்.

இதுகுறித்து ராஜேஸ்வரி கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் புலன்விசாரணை மேற்கொள்ளத் தொடங்கியதை அடுத்து செல்போன் சிக்னல்களை கொண்டு ஆய்வாளர் பிரபாதேவி தலைமையிலான தனிப்படை திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் கிராமத்திற்குச் சென்று, அங்கு பதுங்கி இருந்த அருண்குமாரை (37) கைது செய்தனர்.

மேலும், அருண்குமாருக்கு உதவிய அவரது நண்பர்களான பிரவீன் (32) மற்றும் சுரேந்தர் (25) ஆகியோரையும் கைது செய்தனர். பின்னர் அருண்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருடிய பணத்தில் 33 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆறு ஜோடி தங்க வளையல்களை வர்ஷினி தன்னிடம் தந்ததாகவும், அதனைத் தனது நண்பர்களான கார்த்திக் மற்றும் சுரேந்தரிடம் கொடுத்து அனுப்பிய நிலையில் கார்த்திக்கிடம் இருந்த 31 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் சேலம் வருமான வரித்துறையில் மாட்டிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைதானவர்கள்

இதனை அடுத்து அருண்குமாரிடம் மீதி இருந்த இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் ஆறு ஜோடி தங்க வளையல்களை கைப்பற்றிய காவல் துறையினர் மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான வர்ஷினியையும் மற்றும் நவீன்குமார், கார்த்திக் ஆகியோரையும் கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:டெல்லியை உலுக்கிய மற்றொரு கார் விபத்து - 3 கி.மீ. தூரத்திற்கு இளைஞர் இழுத்துச்செல்லப்பட்டு கொலை!

ABOUT THE AUTHOR

...view details