ETV Bharat / bharat

டெல்லியை உலுக்கிய மற்றொரு கார் விபத்து - 3 கி.மீ. தூரத்திற்கு இளைஞர் இழுத்துச்செல்லப்பட்டு கொலை!

author img

By

Published : May 3, 2023, 6:26 PM IST

இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய எஸ்யுவி கார், இருசக்கர வாகன ஓட்டியை கார் பேனட்டில் வைத்து 3 கிலோ மீட்டர் இழுத்துச் சென்ற சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.

Delhi
Delhi

டெல்லி : தலைநகர் டெல்லியில் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய எஸ்யுவி வகை கார், இரு சக்கர வாகன ஓட்டியை காரின் பேனட்டில் வைத்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியை உலுக்கும் இரண்டாவது பெரியசம்பவம் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி நடந்துள்ளது. கஸ்தூரி பாய் காந்தி மார்க் பகுதியில் எஸ்யுவி வகை கார் தறிகெட்டு ஓடியதாக கூறப்படுகிறது. சாலையின் முன்னால் சென்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது கார் பலமாக மோதியது.

மோதிய வேகத்தில் முன்னால் சென்ற இரு சக்கர வாகன ஓட்டி பறந்து காரின் முன்பக்க பேனட்டில் விழுந்தார். இரு சக்கர வாகனத்தில் பின்னால் இருந்த நபர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இருப்பினும் விபத்து ஏற்படுத்திய கார், நிற்காமல் சென்று உள்ளது. விபத்தைக் கண்ட அருகில் இருந்தவர்கள் காரை நிறுத்த முயன்று உள்ளனர்.

இருப்பினும் கார் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், போலீசார் துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். இரு சக்கர வாகன ஓட்டியுடன் 3 கிலோ மீட்டர் தூரம் சென்ற காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

கார் பேனட்டில் சிக்கிய இரு சக்கர வாகன ஓட்டி தீபான்ஷு வர்மா என்றும் அவருடன் பயணித்த உறவினர் முகுல் வர்மா என்றும் போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். தீபான்ஷு வர்மா மற்றும் முகுல் வர்மா ஆகியோரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதில் தீபான்ஷு வர்மா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

முகுல் வர்மா தொடர் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். காரை தாறுமாறாக செலுத்தி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் ஹர்நீத் சிங் சாவ்லாவை போலீசார் கைது செய்தனர். ஹர்நீத் சிங் சாவ்லா மது போதையில் விபத்தை ஏற்படுத்தினாரா அல்லது வேறெதும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த விபத்து நிகழ்ந்ததா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் இதேபோன்று ஒரு சம்பவம் டெல்லியில் அரங்கேறி ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. தனியார் நிறுவன பெண் ஊழியர் அஞ்சலி, இதேபோன்று ஒரு கார் விபத்தில் சிக்கி, ஏறத்தாழ நான்கு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். சாலையில் சென்று கொண்டு இருந்த அஞ்சலியின் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் அவர் பக்கவாட்டில் சிக்கிக் கொண்டார். 4 கிலோ மீட்டர் தூரம் அஞ்சலி இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஆடைகள் கிழிந்து மோசமான காயங்களுடன் சடலமாக அவர் மீட்கப்பட்டார்.

இதையும் படிங்க : Same sex marriage: அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு அமைக்க மத்திய அரசு முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.