தமிழ்நாடு

tamil nadu

அரிவாளால் வெட்ட முயன்றதால் துப்பாக்கிச்சூடு - காவல்துறை விளக்கம்

By

Published : Feb 15, 2023, 9:30 AM IST

நீதிமன்றம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பியோட முயன்ற போது தனிப்படை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர்.

கோவை கொலை சம்பவம்
கோவை கொலை சம்பவம்

கோவை கொலை சம்பவம்: தப்ப முயன்ற 2 குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்

கோயம்புத்தூர்: கோவை நீதிமன்றம் அருகே திங்கட்கிழமை மதியம் பட்டப்பகலில் கோகுல் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. இந்த சம்பவத்தைத் தடுக்க முயன்ற மனோஜ் என்பவருக்குத் தலை மற்றும் கையில் கத்தி குத்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பந்தயச் சாலை காவல் துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த மனோஜ் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றிய காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலைக் குற்றவாளிகள் நீலகிரி மாவட்டத்திற்குச் சென்றதாக அவர்களின் செல்போன் சிக்னல் மூலம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நீலகிரியில் அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி அருகே கட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 7 பேரைப் பிடித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ஹரி, பரணி செளந்தர், கெளதம், அருண்குமார், ஜோஸ்வ தேவ்பிரியன், சூரியா, டேனியல் ஆகியோர் என்பதும், அவர்கள் கோகுலைக் கொலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த 7 பேரையும் நீலகிரி காவல் துறையினர், கோவை தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் குற்றவாளிகள் 7 பேரையும் கோவைக்கு அழைத்து வரும் வழியில், மேட்டுப்பாளையத்தில் கெளதம், ஜோஸ்வா ஆகியோர் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காவல் துறையினரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால், அந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது, "கோகுல் கொலை செய்யப்பட்ட வழக்கில், உடனிருந்த மனோஜ் அளித்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடத்தப்பட்டது. குற்றவாளிகள் நீலகிரி மாவட்டம் குன்னூரில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தனிப்படை காவல் துறையினர் தேடிச் சென்ற போது தப்பித்து சென்றனர். ஊட்டியில் பதுங்கி இருந்ததாகத் தகவல் கிடைத்த இடங்களில் காவல்துறையினர் சோதனை செய்தனர். மேலும் அவர்கள் கோத்தகிரியை நோக்கி 4 பைக்குகளில் சென்று கொண்டு கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

ஆகையால் ஊட்டி காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்ட காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் அடிப்படையில் வந்தவர்களைப் பிடித்து விசாரணை செய்த போது, கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து கோவை தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது மேட்டுப்பாளையம் வன கல்லூரி முன்பாக கெளதம், ஜோஸ்வா ஆகியோர் திடீரென வாந்தி, தலை சுற்றுதல் ஏற்படுவதாகவும், இயற்கை உபாதை கழிக்க வேண்டுமென வற்புறுத்தி வாகனத்தை நிறுத்தினர்.

பின்னர் அந்த சமயத்தில் இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர். காவலர்கள் அவர்களை விரட்டும் போது ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர் யூசூப்பை தாக்கியதில் காயம் ஏற்பட்டது. ஆகையால் காவல் துறையினர் எச்சரித்தும் நிற்காமல் தாக்க முயன்றதால், தற்காப்பிற்காக இருவரையும் காலில் துப்பாக்கியால் உதவி ஆய்வாளர் சுட்டுள்ளார். இருவருக்கும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இரக்கமற்ற செயல்.. 4 ஏக்கர் மாமர செடிகளை வெட்டிய மர்ம நபர்!

ABOUT THE AUTHOR

...view details