தமிழ்நாடு

tamil nadu

திமுக அதிமுக இடையே மோதல் - எம்எல்ஏ ஜெயராமன் மீது தாக்குதல்

By

Published : Dec 21, 2021, 7:08 PM IST

கோயம்புத்தூர் கிணத்துக்கடவு அருகே 30 ஆண்டுகளுக்குப் பிறகு குளத்தை நிரப்ப காரணமாக இருந்தது யார் எனக் கூறி திமுக, அதிமுக-வினரிடையே ஏற்பட்ட மோதலில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமன் தாக்கப்பட்டார்.

திமுக அதிமுக இடையே மோதல்
திமுக அதிமுக இடையே மோதல்

கோயம்புத்தூர்: கிணத்துக்கடவு வட்டத்திற்குட்பட்ட கோதவாடி கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் சேமிக்கப்படும் மழைநீர், பிஏபி கால்வாய் மூலம் கிடைக்கும் நீரைக் கொண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைந்து வந்தன.

ஆனால், கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீரின்றி இந்தக் குளம் வறண்டு காணப்பட்டது. இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சரின் உத்தரவுப்படி பிஏபி கால்வாயின் உபரி நீரை, கோதவாடி குளத்திற்கு வழங்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக கோதவாடி குளம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமன் அதிமுக நிர்வாகிகளுடன் குளத்தைப் பார்வையிட வந்தார். முன்னதாக குளக்கரையிலுள்ள கோயிலில் பொங்கல் வைத்து வழிபடவும் அதிமுக-வினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இத்தகவல் அறிந்ததும் திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன், ஒன்றிய பொறுப்பாளர்கள் செட்டியக்காபாளையம் துரை, கன்னிமுத்து, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வேலுச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் அங்கு குவியத் தொடங்கினர்.

பொள்ளாச்சி பொறுப்பு டிஎஸ்பி சினீவாசன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர், அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்தனர்.

நீர் அரசியல்

குளம் நிரம்பக் காரணமாக இருந்தது போல் அதிமுக-வினர் இங்கு அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது என திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். குளத்தை நிரப்புவது திமுக, பொங்கல் வைப்பது அதிமுக-வா என அப்போது கோஷங்களை எழுப்பினர்.

மேலும், அங்கிருந்து சட்டப்பேரவை உறுப்பினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியபோது இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. நிலைமையை உணர்ந்த காவல் துறையினர் ஜெயராமன் உள்பட அதிமுகவினரை குளக்கரையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

திமுக அதிமுக இடையே மோதல்

அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பாக, சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமன், அதிமுக-வினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக-வினர் காவல் துறையினரிடம் புகார் மனுவும் அளித்தனர்.

இதற்கிடையில் பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமன் மீது திமுகவினர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி காலமானார்: முதலமைச்சர் குடும்பத்துடன் அஞ்சலி

ABOUT THE AUTHOR

...view details