தமிழ்நாடு

tamil nadu

1998 கோவை குண்டு வெடிப்பு கைதிகளின் கருணை விடுதலை விவகாரம் - வழக்கை முடித்த உயர் நீதிமன்றம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 9:49 PM IST

Coimbatore Bomb blast case: கோவை குண்டு வெடிப்பு கைதிகள் 20 பேரை அண்ணா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முறையான ஆதாரங்கள் இல்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

கோவை குண்டு வெடிப்பு கைதிகள் விவகாரம்
கோவை குண்டு வெடிப்பு கைதிகள் விவகாரம்

சென்னை:தமிழ்நாடு இந்து இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜலேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக அல்உம்மா பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாகவும், இதில் 58 பேர் உயிரிழந்ததாகவும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும், சிலருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும், தண்டனையை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 20 பேர் தற்போது சிறையில் உள்ளதாகவும், அவர்களை அண்ணா பிறந்தநாளை ஒட்டி விடுதலை செய்ய முடிவெடுத்து உள்ளதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறும் நோக்கத்துடன் இவர்களை விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதனால், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை கருணை விடுதலை செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என இந்து இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜலேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உயர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, 49 கைதிகளை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்து உள்ளதாகவும், அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக விதிகள் வகுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு நகல் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலும், முறையான ஆவண ஆதாரங்கள் இல்லாமலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும், பயங்கரவாத தடுப்பு சட்டங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலை பெற தகுதியில்லை என அரசாணையில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குற்ற வழக்கின் தீர்ப்பின்படி அவர்கள் விடுதலை பெற தகுதியில்லை என தெரிந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "வேங்கைவயல் விவகாரத்தில் அரசு ஏன் மவுனமாக இருக்கிறது" - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

ABOUT THE AUTHOR

...view details