ETV Bharat / state

"வேங்கைவயல் விவகாரத்தில் அரசு ஏன் மவுனமாக இருக்கிறது" - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 5:11 PM IST

Madras High Court: குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்துவதில் சிரமம் இருந்தால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணனை கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

மேலும், ஒரு நபர் ஆணையம், 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், ஒரு நபர் ஆணையம் ஜூலை 28 ஆம் தேதி இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீதிமன்றம் நியமித்த ஆணையத்தின் அறிக்கை ஏன் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. ஆணையத்தின் விசாரணையில் என்ன முன்னேற்றம் உள்ளது என தெரிவிக்க வேண்டும் என்றுக் கூறினார்.

இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவது தொடர்பாக ஆணையம் எந்த பரிந்துரையையும் வழங்கவில்லை. வேங்கைவயல் பகுதியில் சந்தேகத்திற்கு உள்ளான 25 நபரின் டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 பேரின் டி.என்.ஏ மாதிரி நிலுவையில் உள்ளது. வழக்கில் இதுவரை 221 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் அடையாளம் காண்பதில் சிரமம் இருந்தால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம். இந்த விவகாரத்தில் அரசு ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறது. நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டது என்றால் அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். ஆணையத்தின் விசாரணையில் புகைப்பட ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படங்கள் கடந்த டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டும், புகைப்படத்தில் இருக்கும் நபர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு வழக்கு தொடர்பாக 9 மாதங்களாகவா? விசாரணை நடத்துவீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக, ஆணையத்தின் அறிக்கையில், ஒரே மாதிரியாக விசாரணை உள்ளது எனவும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படுவதாகவும், சம்பவத்திற்கு அரசியல் காரணமா? அல்லது தனிப்பட்ட காரணம் ஏதும் உண்டா எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.

விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? எனவும் சந்தேகத்திற்கு உள்ளான 29 பேரின் டி.என்.ஏ அறிக்கை ஆகியவற்றை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட பாலியல் புகார்: "எதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது" - சிபிசிஐடி-க்கு சராமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.