கோவையில் கடந்த சில நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதியம், இரவு வேளைகளில் மழை பெய்வதால், கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று (ஜன. 06) கருமேகங்கள் சூழ்ந்து விடிய விடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. நகரின் முக்கிய பகுதிகளான, காந்திபுரம், ரயில் நிலையம், சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், ராமநாதபுரம், சிவானந்தா காலனி போன்ற பகுதிகளிலும், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி போன்ற பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது.
மழைநீர் அப்புறப்படுத்தல்
இதனால், அவினாசி சாலை மேம்பாலம், கிக்கானி பள்ளி போன்ற பகுதிகளில் உள்ள பாலங்களின் அடியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதில், குறிப்பாக கோவை புரூக்பாண்ட் சாலை அருகேயுள்ள மேம்பாலத்தின் அடியில் ஒரு வாகனம் மழை நீரில் சிக்கியுள்ளது. தகவலறிந்து, போர்க்கால அடிப்படையில், மாநகராட்சி ஊழியர்கள் அதிகாலை முதலே ராட்சத குழாய்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தி சாலைகளை ஒழுங்குப்படுத்தும் பணியிலும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.