தமிழ்நாடு

tamil nadu

கோவை வெடிப்பில் முடிவு எடுக்க வேண்டியவர்கள் ஏன் 4 நாட்கள் தாமதம் செய்தனர்?: ஆளுநர்

By

Published : Oct 28, 2022, 3:44 PM IST

Updated : Oct 28, 2022, 8:40 PM IST

கட்டட திறப்பு விழா

கோவை வெடிப்பில் முடிவு எடுக்க வேண்டியவர்கள் ஏன் 4 நாட்கள் தாமதம் செய்தனர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: பாலக்காடு சாலையில் உள்ள ஜெ.எஸ்.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் கட்டட திறப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்த இயற்கை மருத்துவம் சார்ந்த கண்காட்சியினை அவர் நேரில் பார்வையிட்டார்.

இதற்குப் பிறகு மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர், தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது எனவும் எந்தவித சமரசமும் இன்றி தீவிரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுகையில் அவர், 'நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு மேற்கத்திய கல்விமுறை சார்ந்து கற்பிக்கப்பட்டது. இதில் நல்ல விஷயங்கள் இருந்தாலும், இப்போதைக்கு தேவைப்படுகிற கல்வி முறையில் நமது கலாச்சாரம் குறித்தும் பண்பாடு குறித்தும் எடுத்துரைத்து முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கல்வி முறை இப்போது தேவைப்படுகிறது.

சனாதன தர்மம் எனும் நமது அடிப்படை கொள்கையை நாம் மறந்து விடக்கூடாது. இதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் முக்கிய பங்கு வகிப்பவை. இன்று உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் மனிதர்களை மையமாக வைத்து செயல்படுவது தான். இதுவே இயற்கையை அழிப்பதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. எனவே இயற்கையை பாதுகாக்கும் கல்வியும் மருத்துவமும் அவசியமாகிறது.

அந்த வகையில் அதிகமான சித்தர்களையும் யோகிகளையும் உருவாக்கியதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மண்ணைச் சேர்ந்த சித்தர் திருமூலர் யோகாவை பற்றி எடுத்துரைத்துள்ளார். ஆசனங்கள் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல அது மன ஆரோக்கியத்தையும் வளர்க்கக்கூடியது.

இன்று உலகமே யோக கலையை பயிற்சி செய்து வருகிறது. சர்வதேச யோகா தினத்தன்று போட்டிகள் நடத்தப்படுகிறது. நமது பாரத பிரதமரின் முன்னெடுப்பில் உலகம் முழுவதும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகத்திற்கே முன்னோடி தேசமாக இந்தியாவை உருவாக்கி வருகிறார்.

நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. இந்திய கலாச்சாரத்தையும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த அறிவையும் வளர்க்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். இயற்கை மருத்துவ முறைக்கு உலக அளவில் மிகப் பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும். நாம் கோவிட் காலகட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இயற்கை மருத்துவங்களை வழங்கினோம். இதுவே நமது பாரதத்தின் பண்பாடு. அந்த வகையில் இயற்கை மருத்துவத்தை கற்பிக்கும் இந்த கல்லூரி நிர்வாகத்தை நான் பாராட்டுகிறேன்.

பாரதப் பிரதமரின் கனவுப்படி 2047 ஆம் ஆண்டு இந்தியா நூறாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும்போது நமது நாடு அனைத்து உலக நாடுகளுக்கும் முன்னோடியாக திகழும். நமது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கும் மற்ற நாடுகள் நம் மீது பல்வேறு வகையில் தாக்குதல்களை நடத்துகின்றன. அதற்கு நாம் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். இதில் முக்கியமானது தீவிரவாத தாக்குதல். இதற்கு நாம் சரியான பதிலடிகளை கொடுத்து வருகிறோம். இது போன்ற தீவிரவாத தாக்குதல்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கட்டட திறப்பு விழா

அரசியல் கட்சிகளாக, எதிர் கொள்கை உடையவர்களாக எவ்வளவு விவாதம் செய்தாலும் கூச்சலிட்டாலும் தீவிரவாதத்திற்கு எதிரான ஒற்றைக் கருத்தில் நாம் இணைய வேண்டும். ஏனென்றால் தீவிரவாதிகளுக்கு நண்பர்கள் என யாரும் கிடையாது. சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டத்தில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் திட்டமிடப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய தாக்குதல்களை அவர்கள் திட்டமிருந்தனர். ஆனால் அது நடக்காமல் போனது. அதில் ஒரு குண்டு மட்டும் வெடித்துள்ளது. ஆனால் அவர்களின் இடத்தில் இருந்து அதிக அளவிலான வெடிகுண்டு தயாரிக்கும் மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது இது ஒரு மிகப்பெரிய சதி என்பதை உறுதி செய்கிறது.

சமீபத்தில் அபாயகரமான தீவிரவாத அமைப்பு தடை செய்யப்பட்டதை தொடர்ந்து ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இவை அனைத்தையும் நாம் மிக எச்சரிக்கையாக கையாள வேண்டும். தீவிரவாதத்தை எதிர்ப்பதில் மத்திய மாநில அரசுகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தீவிரவாதத்தை தனிமைப்படுத்த வேண்டும்.

கோயம்புத்தூர் இது போன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பெயர் போன இடமாக மாறி வருகிறது. தற்போது நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு அமைப்பின் கண்காணிப்பில் இருந்துள்ளனர். தீவிரவாத செயல்களை கண்காணிப்பதில் நாம் தவறி விட்டோம். இங்கிருந்து ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் பயிற்சி செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை நாம் மிகவும் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்பது தெளிவாக தெரிந்தது.

இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு காவல்துறையை சிறப்பாக செயல்பட்டது. நம் தேசத்தின் சிறப்பான காவல் துறைகளில் தமிழக காவல்துறையும் ஒன்று. ஆனால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு அமைப்பிற்கு வழங்கியதில் ஏன் இவ்வளவு தாமதம் என்பது தான் கேள்வி. தீவிரவாத தாக்குதல்களை பொறுத்தவரை சம்பவம் நடந்து அடுத்தடுத்த நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. ஆனால் நாம் நான்கு நாட்களுக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு முகமைக்கு கொடுத்துள்ளோம்.

இது போன்ற வாய்ப்புகளை தீவிரவாதிகளுக்கு வழங்கக்கூடாது. இந்திய நாட்டுக்காக தீவிரவாதத்தின் மீது மென்மையான பார்வை வேண்டாம். தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக நடவடிக்கை எடுத்தது. அதனால் நேரடியாக தேசிய பாதுகாப்பு முகமையை தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் முடிவு எடுக்க வேண்டியவர்கள் ஏன் நான்கு நாட்கள் தாமதம் செய்தனர்.

நான் முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது தமிழ்நாடு காவல்துறை பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஒரு தீவிரவாத அமைப்பு என எனக்கு தகவல் அளித்தது. அந்த வகையில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படக் கூடியவர்கள் என எனக்கு தெரியும். நமது நாடு முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. இதை யாரும் பின்னோக்கி கொண்டு வர முடியாது. தீவிரவாத செயல்களால் இந்த தேசத்தை பின்னோக்கி கொண்டு வர முடியும் என நினைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ட்விட்டரின் அதிகாரப்பூர்வ தலைவரானார் எலான் மஸ்க் - பராக் அகர்வால் நீக்கம்

Last Updated :Oct 28, 2022, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details