தமிழ்நாடு

tamil nadu

கோவையில் மாபெரும் 'தமிழ்க் கனவு நிகழ்ச்சி' நடைபெற உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர்!

By

Published : Aug 9, 2023, 4:38 PM IST

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வருகின்ற 11ம் தேதி 'மாபெரும் தமிழ்க் கனவு' என்ற தலைப்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

collector
மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்

கோயம்புத்தூர்:மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில், “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் உயர் கல்வித்துறையுடன், தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டது.

இதன் 100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றுகையில், இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது என்றும், எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.

நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினரிடையே குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு முன்னெடுத்துள்ளது. அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் ''மாபெரும் தமிழ்க் கனவு'' பரப்புரைத் திட்டம் என்று செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு, அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பங்குபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம், குறைந்தபட்சம் 1.5 லட்சம் மாணவர்களை சென்றடைவதே திட்டத்தின் இலக்காகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட ஆளுமைகளைக் கொண்டு, 200 சொற்பொழிவுகளை நடத்தி முடிக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், தமிழ் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலும், அதேநேரம் தாங்கள் புலமை பெற்ற துறை சார்ந்தும் பேருரை நிகழ்த்துவார்கள். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆளுமைகள், பல்துறை நிபுணர்கள் ஆகியோரின் ஊக்கமிகு உரை, மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், உணர்த்துவதாகவும் அமைந்து வருகிறது.

மேலும், தமிழ் மரபின் பெருமிதத்தை இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பரப்புரையின் முதல் நிகழ்வாக வரும் 11ம் தேதி அன்று காலை 9.00 மணிக்கு, கோயம்புத்தூர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் "மாபெரும் தமிழ்க் கனவு'' நிகழ்ச்சியில் சமூக நீதியும் மானுட அறமும் என்னும் பொருண்மையில் திருமிகு யாழினி மருத்துவர் கருத்துகளை எடுத்துரைக்கவுள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக்காட்சி, நான்முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மாவட்டத் தொழில்மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆர்ட்டெமிஸ்2: ஓரியன் விண்கலத்தை முதல்முறையாக பார்வையிட்ட விண்வெளி வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details