கோயம்புத்தூர்:இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உருமாறிய கரோனா தொற்று ஒமைக்ரான் பரவலும் வேகமெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று (ஜனவரி 10) ஒரே நாளில் 12 ஆயிரத்து 895 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இன்று (ஜனவரி 10) தொடங்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து கோவையில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை அரசு மருத்துவமனையில் இன்று தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், "கோவை மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் 85 ஆயிரத்து 554, முன்களப் பணியாளர்கள் 96 ஆயிரத்து 762, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 72 ஆயிரம் என மொத்தம் இரண்டு லட்சத்து 49 ஆயிரம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜனவரி மாத இறுதிக்குள் 70 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம் கோவை மாவட்டத்தில் உள்ள மொத்த கரோனா கேர் சென்டர்களில் நான்காயிரத்து 300 படுக்கைகளும், ஐந்தாயிரம் ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். அதே சமயம் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தகுதியுள்ளவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: stalin visits ration shop: ரேசன் கடைகளில் முதலமைச்சர் ஆய்வு