தமிழ்நாடு

tamil nadu

இஸ்லாமிய பெண்களை குறிவைத்து நூதன மோசடி.. மன்மதன் சிக்கியது எப்படி?

By

Published : Feb 8, 2023, 6:44 AM IST

இஸ்லாமிய திருமணப் பதிவு செயலி மூலம் பெண் பார்த்து, அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறித்து மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை அண்ணா சாலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இஸ்லாமிய இளம்பெண்களுக்கு திருமண வலைவீச்சு - மோசடி மன்னன் கைது!
இஸ்லாமிய இளம்பெண்களுக்கு திருமண வலைவீச்சு - மோசடி மன்னன் கைது!

சென்னை:புதுக்கோட்டையைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் (25) ஒருவர் கடந்த டிசம்பர் மாதம், சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த 2017ஆம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்து சில மாதங்களிலேயே விவாகரத்தானது. இதனால் தனியார் இஸ்லாமிய திருமண பதிவு செயலியில் 2ஆம் திருமணத்திற்காக பதிவு செய்து வைத்திருந்தேன். அந்த நேரத்தில் குறிப்பிட்ட அந்த செயலி மூலம் பழக்கம் ஏற்பட்ட முகமது உபேஸ் என்கிற நபர், 10 நாட்களாக என்னிடம் பேசி வந்தார். 10 நாட்களுக்குப் பிறகு என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

மேலும் அதற்காக ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் கூறி, சென்னை ராயப்பேட்டைக்கு வருமாறு என்னை அழைத்தார். அதன் அடிப்படையில் சுமார் 50 சவரன் நகைகளுடன் ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலுக்கு சென்ற என்னிடம் இருந்து, திருமணச் செலவிற்காக நகைகளை விற்று பணம் வாங்கி எடுத்து வருவதாக முகமது கூறினார். எனவே நான் நகைகள் அனைத்தையும் கொடுத்துவிட்டு, மாலில் காத்திருந்தேன். வெகு நேரம் ஆகியும் முகமது வராததால், நான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்தேன்” என தெரிவித்திருந்தார்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அண்ணா சாலை காவல் துறையினர், மாலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர். இருப்பினும், ஏற்கனவே உள்ள குற்றவாளிகளின் பட்டியலிலும், சந்தேகப்படும் படியான பட்டியலிலும் முகமதுவின் புகைப்படம் இல்லாததால் அவரை பிடிப்பதில் சிக்கல் நீடித்தது. தொடர்ந்து ஒரு மாத காலம் தொடர் விசாரணை நடத்தியதில், மோசடியில் ஈடுபட்ட முகமது ஈரோட்டில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் நேற்றைய முன்தினம் (பிப்.6) ஈரோட்டிற்குச் சென்ற அண்ணா சாலை காவல் துறையினர், அங்கு ஒரு தனியார் லாட்ஜில் பதுங்கி இருந்த முகமதுவை கைது செய்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து முகமதுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உபேஸ் (37) நிரந்தரமான எந்த வேலையும் இல்லாததால், விவாகரத்தான இஸ்லாமிய பெண்கள் மற்றும் நீண்ட நாட்களாகத் திருமணமாகாமல் இருக்கும் இஸ்லாமியப் பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

அதன்படி இஸ்லாமிய திருமண பதிவு செயலியில் திருமணத்திற்குப் பெண் தேடுவதுபோல் பதிவு செய்துவிட்டு, அதன் மூலம் தொடர்பு கொள்ளும் பெண்களை அணுகி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து நம்பிக்கை பெற்ற பெண்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதன்படியே சென்னைக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண்ணை வரவழைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் மதுரை, வாணியம்பாடி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் உள்ள 5 இஸ்லாமிய பெண்களை ஏமாற்றி உள்ளார்” என தெரிய வந்தது. இதனையடுத்து மோசடியில் ஈடுபட்டு கிடைத்த பணத்தில் வாங்கிய விலை உயர்ந்த செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதேநேரம் புகார் அளித்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து திருடிச் சென்ற நகையில் ஒரு பகுதியையும், ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணைக்குப் பிறகு முகமதுவை கைது செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:ரூ.55 ஆயிரத்திற்காக பேத்தியை விற்ற பாட்டி.! - பாலியல் வன்கொடுமை பரிதாபம்!

ABOUT THE AUTHOR

...view details