தமிழ்நாடு

tamil nadu

உச்சம் தொட்ட தக்காளி விலை: கிலோ ரூ.110-க்கு விற்பனை... காரணம் என்ன?

By

Published : Jul 1, 2023, 11:43 AM IST

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.110க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

tomato price
தக்காளி விலை

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தக்காளி விலை கிடுகிடுவென உயரத் தொடங்கி, தற்போது 100 ரூபாயை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

ஆகவே, அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும், தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தக்காளியின் விலை இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் தக்காளி விலையின் உயர்வு குறித்து பேசிய கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் செளந்தரராஜன், "கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக 80 லாரிகளில் சுமார் 1,500 டன் அளவிற்கு தக்காளியின் வரத்து இருந்த நிலையில், தற்போது 40 லாரிகளில் சுமார் 600 டன்னுக்கும் குறைவாக வரத்து வருகின்றது.

இதனால், தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, தக்காளியின் சில்லறை விலை 110 ரூபாய்க்கும், மொத்த விலை 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 15 கிலோ பெட்டியின் விலை ரூ.1600க்கும், 20 கிலோ பெட்டியின் விலை ரூ.2500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மழை காரணமாக விரைவில் தக்காளி அழுகும் சூழல் ஏற்படுவதால் சில்லறை வியாபாரிகள் தக்காளியை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், அரசு விவகாரத்தில் தலையிட்டு தக்காளியை பதப்படுத்துவதற்கும், சேமிப்பு வைத்துக் கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றோம்" என கூறினார்.

கோயம்பேடு சந்தையில் தக்காளி மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குடை மிளகாய் கிலோ 140 ரூபாய்க்கும், அவரைக்காய் மற்றும் கொத்தவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதையும் படிங்க: Rope pulling: ரோப் புல்லிங் மரியாதை என்றால் என்ன?

ABOUT THE AUTHOR

...view details