தமிழ்நாடு

tamil nadu

“நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற்று பாஜகவை வீட்டுக்கு அனுப்பும்” - உதயநிதி ஸ்டாலின்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 3:15 PM IST

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி தொடர்பாக உண்மையான காரணம் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்பி, இந்தியா கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை - கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், 50 மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர், காது கேட்கும் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சர்ச்சை தொடர்பாக காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு வந்த அதீத கூட்டம் தான் காரணம் என கூறப்படுகிறது. இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி தொடர்பாக உண்மையான காரணம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து, ரகுமானை குறி வைத்து சிலர் விமர்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு, “எதாவது காரணம் கிடைக்காதா என்று காத்திருப்பவர்கள் தான் அவ்வாறு செய்கின்றனர். இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பின்னர், “சனாதானம் குறித்து 200 ஆண்டுகளாக பேசிக்கொண்டே இருக்கிறோம். அதைவிட தற்போது பாஜவின் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குறித்தும், மணிப்பூர் கலவரம் குறித்தும் பேச வேண்டியது கட்டாயம் நமக்கு இருக்கிறது. முதலில் அதை பேசுவோம்.
மக்களுக்கு உண்மை நிலவரம் என்ன என்று எடுத்து கூறுவோம். அதற்கான கடமை நமக்கு இருக்கிறது, இந்த தேர்தலோடு பாஜக அரசை ஒழிக்க கவனம் செலுத்த வேண்டும்.

அதிமுக தொடர்ந்து ஐந்து தேர்தலில் தோல்வியடைந்து உள்ளது. அதனால், தான் ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக இப்போது ஆதரிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் அந்த தேர்தலிலும் ஒரேயடியாக தோல்வியடந்துவிட்டால் அதிமுக மன திருப்பதி அடைந்துவிடும்.

இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கூட்டணியில் உள்ள தலைவர்கள் முடிவுகளை எடுப்பார்கள். ஆனால், ஏற்கனவே தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டோம். தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகவே இருக்கிறது. வருகின்ற தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்பி, இந்தியா கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்” என்றார்.

இதையும் படிங்க:கூவம், அடையாறு சீரமைப்பின் நிலை என்ன- வெள்ளை அறிக்கை வேண்டும் : அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details