ETV Bharat / state

கூவம், அடையாறு சீரமைப்பின் நிலை என்ன- வெள்ளை அறிக்கை வேண்டும் : அன்புமணி ராமதாஸ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 2:28 PM IST

renovation of Coovam and Adyar: கூவம், அடையாறு சீரமைப்பின் நிலை என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

renovation of Koovam and Adyar
கூவம் அடையாறு சீரமைப்பின் நிலை என்ன - அன்புமணி ராமதாஸ்

சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை நதிகள் சீரமைப்புத் திட்டப் பணிகள் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "சென்னையின் அடையாளங்களாக திகழும் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகளை சீரமைப்பதற்காக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதற்காக அந்த அறக்கட்டளைக்கு 2015-16ஆம் ஆண்டு முதல் ரூ.1479 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு uள்ளது.

இந்த நிதியில் இதுவரை ரூ.790 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஆறுகளை சீரமைக்கும் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடான ரூ.1479 கோடியில் இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை என்பது 54 விழுக்காடு ஆகும்.

ஒரு திட்டத்திற்கான ஒதுக்கீட்டில் 54% செலவழிக்கப்பட்டிருந்தால், அந்த அளவுக்கு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கூவம் மற்றும் அடையாற்றை சீரமைக்கும் பணிகளில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை, அதிகாரிகளிடமும் இதற்கு பதில் இல்லை.

அடையாற்றில் நந்தம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட சில இடங்களிலும், கூவம் ஆற்றில் அமைந்தகரை, எத்திராஜ் சாலை உள்ளிட்ட சில இடங்களிலும் சீரமைப்புப் பணிகள் ஓரளவு நடந்திருப்பது உண்மை. அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் மதிப்பு சில லட்சங்களில் வேண்டுமானால் இருக்கலாமே தவிர, அரசால் குறிப்பிடப்படும் அளவுக்கு இருக்காது.

கூவம் ஆற்றை சீரமைக்கும் பணி 2015ஆம் ஆண்டிலும், அடையாறை சீரமைக்கும் பணி 2017ஆம் ஆண்டிலும் தொடங்கியது. அடையாறும், கூவமும் ஒரு காலத்தில் சென்னையின் புனித ஆறுகளாகத் தான் இருந்தன. அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் சென்னை மாநகர மக்களின் 60 ஆண்டு கால கனவாக இருந்து வருகிறது.

அதற்காக பல தருணங்களில் ஆயிரக்கணக்கான கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டனவே தவிர, கூவம் மற்றும் அடையாறின் துர்நாற்றம் மட்டும் குறையவில்லை. அடையாறு மற்றும் கூவத்தை சீரமைப்பது சாத்தியமில்லாத இலக்கு அல்ல. உலகின் பல நாடுகளில் இதை விட மோசமான ஆறுகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

அடையாறு தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரையிலான நீளம் 42 கி.மீ மட்டும் தான். அதேபோல், கூவம் ஆற்றின் நீளம் 65 கி.மீ தான். மன உறுதியுடன் பணிகள் தொடங்கப்பட்டால், 5 ஆண்டுகளில் கூவத்தையும், அடையாறையும் அழகு மிகுந்த சுற்றுலாத் தலங்களாக மாற்றி விட முடியும். ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கூவம், அடையாறு சீரமைப்பு என்பது தேர்தல் காலத்து பேசு பொருளாக மட்டுமே உள்ளது.

அடையாறு மற்றும் கூவத்தை சீரமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகையை ஆற்றில் கொட்டியதாக நினைத்து கடந்து போய்விட முடியாது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

எனவே, சென்னை நதிகள் சீரமைப்புத் திட்டத்தில் இதுவரை என்னென்ன பணிகள் நடைபெற்றுள்ளன? அனைத்து பணிகளும் எப்போது முடியும்? கூவம் மற்றும் அடையாறின் கரைகளில் மக்கள் காற்று வாங்கியபடி பொழுதுபோக்குவது எப்போது? என்பன போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: Army Dog Kent: இந்திய ராணுவத்தைச் சேர்ந்த நாய் வீர மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.