தமிழ்நாடு

tamil nadu

அண்ணாமலையின் பகல் கனவு.. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 3:26 PM IST

TN Government: அண்ணாமலை பகல் கனவு காண்பது போல, மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

tn-government-statement-about-bjp-annaamalai-twitter
அண்ணாமலை பகல் கனவு பலிக்காது..தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்!

சென்னை:பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது, தமிழ்நாடு அரசு. அதன்படி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக, மைக்ரோசாஃப்ட் TEALS திட்டம் என்னும் ஒரு திட்டத்தை, நாட்டிலேயே முதன்முறையாக கொண்டு வந்திருக்கிறது.

இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வலைத்தளப் பக்கத்தில், இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்திருந்தார். மேலும், தேசிய கல்விக் கொள்கையில் கட்டாயமாக்கப்பட்ட மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு விரைவில் பரிசீலிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் தரும் விதமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தகவல் தொடர்பு கருவி இருக்கும் என்று இன்றைய செல்போன் குறித்து, அன்றே கணித்துச் சொன்னவர் பெரியார். இதன் தொடர்ச்சியாக 1997-லேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழ்நாட்டுக்கென தனியே தகவல் தொழில்நுட்பத் துறைக்கான கொள்கை ஒன்றை உருவாக்கி, தனியாக ஒரு துறையை உருவாக்கி, அதற்கென ஒரு அமைச்சரை நியமித்தார்.

இதன் மூலம் சென்னை ஒரு ஐ.டி ஹப் ஆக மாறியது. இன்றைக்கு பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் காணப்படும் ஐ.டி நிறுவனங்கள் அனைத்திற்கும், அன்றே வித்திட்டது தமிழகத்தில் இதற்கென உருவாக்கபட்ட தனிக்கொள்கைதான். அதனைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை, தமிழ்நாட்டில் 2020-இல் உருவாக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை, தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது. எடுத்துக்காட்டாக, தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக ஆக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது.

ஆனால், அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின் படி (All India Survey of Higher Education (AISHE), தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதிவிகிதத்தை 2019-2020 கல்வியாண்டிலேயே எட்டிவிட்டது. 2035ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதத்தை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது, தேசிய கல்விக் கொள்கை. ஆனால், தமிழ்நாடு 100 சதவீதத்தையே 2035-இல் எட்டிவிடும்.

தமிழ்நாடு அரசு செய்ததை, செய்து கொண்டிருப்பதை தேசிய கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு, தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது வேடிக்கையளிக்கின்றது. குறிப்பாக, தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை.

நாட்டின் மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாடு எப்பொழுதும் தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாகவேத் திகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர். முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்றவற்றில் வருங்காலத்தில் மிகத் தீவிரமாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

ஏனெனில், செயற்கை நுண்ணறிவை கையிலெடுக்கும் மாநிலமே, இன்னும் பத்தாண்டுகளில் முன்னணி மாநிலமாக இருக்கப்போகிறது. பெரியார் காட்டிய பாதையில், தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பது போல, மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை; இருமொழிக் கொள்கையே தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details