சென்னை: வட மாநிலங்களில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களுக்குச் செல்வதற்கு மத்திய சுற்றுலாத்துறை சார்பில் ஹெலிகாப்டர் சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவையை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். சில தனியார் நிறுவனங்கள் இது போன்ற ஆன்லைன் முன்பதிவுகளை செய்து கொடுக்கிறார்கள். இந்த சூழலைப் பயன்படுத்தி, ஹெலிகாப்டர் பயணத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களிடம் மோசடி கும்பல் ஒன்று பணம் பறிப்பதாகவும், இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களுங்களான பத்ரிநாத், கேதார் நாத், கங்கோத்ரி, யமுனோத்திரி ஆகிய இடங்களுக்கும், வைஷ்ணவ தேவி கோவிலுக்கும் ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாகக் கூறி போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டு பக்தர்கள் ஏமாற்றப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன.
வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களைக் குறி வைத்து இந்த மோசடியை செய்கின்றனர். மோசடி செய்பவர்கள் தங்களை ஹெலிகாப்டர் புக்கிங் நிறுவனத்தின் நிர்வாகிகள் போல் காட்டிக்கொண்டு, இணையத்தில் பக்தர்கள் தேடும்போது கூகுளில் முதல் பக்கத்திலயே இடம்பெறும் வகையில் இணையதளத்தை தயார் செய்கின்றனர்.
இந்த இணையதளத்தில் நுழைந்து முன்பதிவைத் தொடர பக்தர்கள் க்ளிக் செய்யும்போது, நேரடியாக வாட்ஸ்அப் பக்கம் ஒன்றிற்கு செல்கிறது. அதில் பணம் செலுத்தும் விவரங்களைப் பற்றி கேட்கின்றனர். மேலும், மோசடி செய்பவர்கள் இந்திய தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகின்றனர் மற்றும் சட்டப்பூர்வ நிறுவனம் போல தோன்றுவதற்காக, ஆலயங்கள் அல்லது தெய்வத்தின் புகைப்படங்களை இணையதளத்தில் காட்டுகின்றனர்.