தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகள் நாளை விசாரணை

By

Published : Sep 21, 2022, 4:17 PM IST

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகள் நாளை விசாரணை

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை நாளை (செப்டம்பர் 22) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு தொடர்பாக தனக்கு எதிராகப்பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களைத் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கவும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகவும் தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த ஆட்சேபனைகளை தலைமை நீதிபதி அமர்வு, நிராகரித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பொறுப்புத்தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நேற்று (செப் 20) உத்தரவிட்டது. மேலும், வேலுமணி தரப்பு கோரிக்கையை ஏற்று, வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, பொறுப்புத்தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு நகலை தாக்கல் செய்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தார்.

ஊழல் தடுப்புச்சட்டத்தில் இடைக்கால நிவாரணம் வழங்கத்தடை உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் இறுதி அறிக்கைத்தாக்கல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டினார்.

இதையடுத்து, வேலுமணியின் மனுக்களை நாளை (செப். 22) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நடிகர் போண்டாமணிக்கு தீவிர சிகிச்சை - கண்ணீர் மல்க உதவி கேட்கும் நடிகர் பெஞ்சமின்

ABOUT THE AUTHOR

...view details