சென்னை:தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று (மார்ச் 17) தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 17 ஐபிஎஸ் அலுவலர்களில் 10 பேரை பணியிடமாற்றம் செய்தும், ஐஜிக்களாக இருந்த 7 அலுவலர்களுக்கு ஏடிஜிபிக்களாகப் பதவி உயர்வு அளித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பாக மத்திய அரசுப்பணியில் இருந்து வந்த அஸ்ரா கார்க் தென் மண்டல ஐஜியாகவும், ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்த அன்பு ஐபிஎஸ், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை, நெல்லை ஆணையர்கள் மாற்றம்
மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா வடக்கு மண்டல ஐஜியாகவும், அந்தப்பதவியில் ஏற்கெனவே இருந்த சந்தோஷ் குமார் திருநெல்வேலி காவல் ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் பொறுப்பு வகித்த செந்தில் குமார், மதுரை காவல் ஆணையராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி காவல் ஆணையர் துரைகுமார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஊர்க்காவல் படை ஐஜி பொறுப்பு வகித்து வந்த வனிதா ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு ரயில்வே ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவலர் நலப்பிரிவு ஐஜி மல்லிகா, தமிழ்நாடு காவல் விரிவாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அயல்பணியில் இருந்து வந்த பாலநாகதேவி தமிழ்நாடு காவல் செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாகவும், ஜெயராமன் தமிழ்நாடு ஊர் காவல்படை ஏடிஜிபி மற்றும் கூடுதல் கமான்டன்ட்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவலர் நலப்பிரிவு உதவி ஐஜியாக இருந்த சம்பத்குமார், அதே பிரிவில் ஐஜியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஐஜி முதல் ஏடிஜிபி வரை
அதேபோல் அயல் பணிகளில் இருந்து வந்த அயுஷ் மணி திவாரி, மகேஷ்வர் தயால்,சுமித் சரண், தமிழக பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி அபின் தினேஷ் மொடாக், தமிழ்நாடு காவல் நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி சஞ்சய் குமார், தமிழ்நாடு காவல் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜி செந்தாமரைக் கண்ணன் ஆகியோருக்கு ஐஜி பதவியில் இருந்து ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ - பாட்டு பாடி அசத்திய பெண் நீதிபதி!