தமிழ்நாடு

tamil nadu

இன்றைய பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்பார் - கரு.நாகராஜன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 10:43 AM IST

Annamalai K: இன்று நடைபெறும் பாஜக கூட்டத்தில் அண்ணாமலை சிறிது நேரம் கலந்து கொள்வார் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறுகையில், “3 மாதத்திற்கு ஒரு முறை நடக்கக் கூடிய மாநில நிர்வாகிகள் கூட்டம்தான் இன்று நடைபெறுகிறது. தனது உடல்நிலை சரியில்லை என்றாலும், சிறிது நேரம் இன்றைய கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். கூட்டணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து தேசிய தலைமை அறிவிக்கும்” என கூறியுள்ளார்.

முன்னதாக, நேற்றைய முன்தினம் (அக்.3) நடைபெற இருந்த மாநில பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு, மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமல் நடைபெற்றது.

இதனிடையே, பாஜக உடன் கூட்டணி முறிவு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் கேட்டு தமிழ்நாடு பாஜகவிற்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்துதான் பாஜக நிர்வாகிகள் கூட்டம் விவாதப் பொருளாக மாறியது. மேலும், கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்தது மீண்டும் அரசியலில் பேசுபொருளாக மாறியது.

ஆனால், இது அரசு ரீதியான சந்திப்பே என்றும், அரசியல் ரீதியான சந்திப்பு அல்ல என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்பட பலரும் கருத்து தெரிவித்தனர். அதிலும், நேற்று (அக்.4) சேலத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக - பாஜக கூட்டணி முறிவு நாடகம் அல்ல எனக் கூறி தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அண்ணாமலை இல்லாமல் நடைபெறும் பாஜக மாநில ஆலோசனைக் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details