தமிழ்நாடு

tamil nadu

ஆளுநர் மாளிகையில் குண்டு வெடித்ததாக கூறுவதில் உண்மையில்லை - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 10:52 PM IST

TN Police reply to TN Governor: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பான புகாரில் தெரிவிக்கப்பட்டது போல ஒன்றுக்கும் மேற்பட்டோர் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அது வெடித்ததாகவும் கூறப்படுவதும்; இதேபோல, 2022 ஏப்ரல் 19-ல் மயிலாடுதுறையில் ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டதாக கூறுவதும் உண்மைக்கு புறம்பானது என்றும்; இவை குறித்து புகார்கள் அளிக்கப்பட்டும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டவில்லை எனக் கூறுவதும் உண்மைக்குப் புறம்பானது எனவும் ஆளுநர் மாளிகை தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:இது குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனரகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், '25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42 வயது - E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் வழக்கமான குற்றவாளி) என்பவர் சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை அருகே தனியாக பாதசாரி போன்று நடந்து வந்தார். அவர் பெட்ரோல் நிரம்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டுவந்து, அவற்றை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார் படேல் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய முற்பட்டபோது, ஆளுநர் மாளிகை வெளிப்புறத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த தமிழ்நாடு காவல்துறை போலீசாரால் தடுக்கப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு பயந்து, சம்பவ இடத்திற்கு எதிரே சற்று தூரத்திலிருந்து இரண்டு பாட்டில்களை வீசினார். அவை ஆளுநர் மாளிகையின் அருகே சர்தார் படேல் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்களுக்கு அருகே விழுந்தது.

பின்னர், அவர் ஆளுநர் மாளிகையின் பிரதான வாயிலிலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில், பாதுகாப்பு போலீசாரால் உடனடியாக கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவத்தால், பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், மேற்படி நபர் தேனாம்பேட்டையிலிருந்து, சம்பவ இடம் வரை தனியாகவே வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, 25.10.2023 அன்று J-3 கிண்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மேற்படி எதிரி, IV-வது பெருநகர குற்றவியல் நடுவர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, 09.11.2023 வரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ரவுடி கருக்கா வினோத் மீது 14 வழக்குகள் நிலுவை:மேற்படி வினோத் ஏற்கனவே, பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் சௌத் போக் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் 12.08.2015 அன்று பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர். அதேபோல், 13.07.2017 அன்று வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரம்பிய பாட்டில்களை வீச முற்பட்ட போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி, வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் மாளிகை பரபரப்பு புகார்:ஆளுநர் அவர்களுக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறு பேச்சு மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை தொடர்பாக காவல்துறையினர் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை எனவும், மேலும் அச்சம்பவங்கள் தொடர்பாக எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு, 25.10.2023 அன்று மருத்துவர் T.செங்கோட்டையன் (ஆளுநரின் துணைச் செயலாளர்) புகார் அளித்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வெடித்தது என்பதே முற்றிலும் உண்மைக்கு புறம்பானது: 25.10.2023 அன்று நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார் படேல் சாலையில் செய்யப்பட்ட செயலாகும். இந்த நிகழ்வில் புகாரில் தெரிவிக்கப்பட்டது போல், ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் (Sentry) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது.

மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம் தாக்கப்பட்டதாக கூறுவதும் உண்மையில்லை; 73 பேர் கைது:அதேபோல், ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்றபோது, ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது. ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்ற பின்னர், அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர்.

அனைத்திற்கும் ஆதாரங்கள் கைவசம் உள்ளன:அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றப் பின்னர், பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி, சம்பவங்கள் அனைத்திற்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன.

விழிப்பான தமிழ்நாடு காவல்துறையால் குற்றவாளி குண்டுக்கட்டாக கைது:மேலும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். மேலே குறிப்பிட்டுள்ளது போன்று எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பிற்காக சர்தார் படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாலும், பலத்த காவல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

நியாயமான விசாரணை நடக்கும்: மேற்படி வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை மேற்கொள்ளப்படும். மேதகு ஆளுநர் அவர்களுக்கும் மற்றும் அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது' என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்!

ABOUT THE AUTHOR

...view details