சென்னை:மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டை தொடங்கியுள்ளது. தனது ஆட்சியில் வெளிப்படைத் தன்மையை பிரதானப்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இரண்டு ஆண்டுகளில் ஏற்கனவே இருமுறை அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ள அவர், மூன்றாவது முறையாக மாற்றம் அதுவும் அமைச்சர் நீக்கம் என்ற அதிரடி முடிவை கையில் எடுத்தார்.
அதன்படி பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் விடுவிக்கப்பட்டு அமைச்சரவையில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு இடம் அளிக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடந்த விழாவில், டி.ஆ.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, எம்.பி. டி.ஆர் பாலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
இதனிடையே, புதிதாக பதவியேற்ற டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 4 அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிதியமைச்சராக இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறைக்கும், தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு நிதித்துறைக்கும், தகவல் தொழில்நுட்பத்துறை பொறுப்பில் இருந்த மனோ தங்கராஜ் பால்வளத்துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செய்தித்துறை அமைச்சராக இருந்த மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளர்சித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Tamil Nadu Cabinet: டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்பு... தொழில்துறை ஒதுக்கீடு!