தமிழ்நாடு முதலமைச்சர் 2019 ஜூலை 9 அன்று சட்டப்பேரவை விதி எண் 110இன்கீழ் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலத் தகவல் ஆணையத்திற்குச் சொந்தக் கட்டடம் கட்டப்பட வேண்டிய அவசியத்தைக் கருதி, சென்னை சைதாப்பேட்டையில் ஐந்து தளங்களைக் கொண்ட சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை சைதாப்பேட்டையில், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், 7924.84 சதுர மீட்டர் கட்டட பரப்பளவில் தரை, ஐந்து தளங்களுடன் 27 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு தகவல் ஆணைய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.
இப்புதிய தமிழ்நாடு தகவல் ஆணைய கட்டடத்தில் மேல்முறையீட்டு விசாரணை அறைகள், ஆணையர்களுக்கான அலுவலக அறைகள், அலுவலர்களுக்கான அறைகள், மேல்முறையீட்டு மனுதாரர்களுக்கான காத்திருக்கும் அறைகள், நூலகம், கூட்டரங்கு, வாகன நிறுத்துமிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் எஸ். ஸ்வர்ணா, மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் ஆர். ராஜகோபால் (ஓய்வு), மாநிலத் தகவல் ஆணையர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்று நிறைவு!