தமிழ்நாடு

tamil nadu

டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் டெண்டர் ரத்து: அண்ணாமலை தகவல்.. மாஜி அமைச்சர் காமராஜ் ரியாக்‌ஷன்!

By

Published : Apr 8, 2023, 3:52 PM IST

தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

annamalai
அண்ணாமலை

சென்னை: கடலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு தரப்பில் ஏலம் கோரப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில், நிலக்கரி சுரங்கம் அமைக்க விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இத்திட்டத்தைக் கைவிடுமாறு, மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கிடையே பெங்களூருவுக்குச் சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நிலக்கரி மற்றும் சுங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை நேரில் சந்தித்தார். விவசாய நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, "மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நமது கோரிக்கையை ஏற்றுத் தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் பிரதமர் நரேந்திர மோடி. தமிழக விவசாயிகள் மற்றும் மாநில பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தஞ்சாவூரில் அதிமுகவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் விண்ணப்பப் படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி எடுப்பது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டது. இதில் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இடங்கள் தஞ்சாவூர், அரியலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் ஆகும். இந்த மூன்று பகுதிகளும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் வருகிறது. ஆகவே இந்த ஒப்பந்தப்புள்ளியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினேன். அதில் மத்திய அரசுக்கு தமிழக அரசு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இன்றைக்கு காவிரி டெல்டா பகுதிகளில் இருந்து நிலக்கரி எடுக்கும் திட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்கும் நிலை வந்த போது வேளாண்மை சார்ந்த திட்டங்கள் மட்டுமே இங்கு வரவேண்டும் என்ற அடிப்படையில், அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்ததே இதற்கு காரணமாகும். அதை வைத்து தான் முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி" என கூறினார்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்திற்கு அண்ணா பெயர்!

ABOUT THE AUTHOR

...view details