தமிழ்நாடு

tamil nadu

குளுகுளு ஊட்டிக்கு சிறப்பு ரயில்கள்.. முன்பதிவு தொடங்கியதாக தெற்கு ரயில்வே தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 7:37 PM IST

Ooty Special Train: மேட்டுப்பாளைம் - ஊட்டி, கேத்தி - ஊட்டி, குன்னூர் - ஊட்டி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

mettupalayam to Ooty Special Train reservation started
ஊட்டி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த மலை ரயிலில் தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் இருந்து ஊட்டி வரும் பயணிகள் விரும்பி பயணம் மேற்கொள்கின்றனர்.

ஊட்டிக்கு ஏப்ரல், மே மாதங்களில் கோடை கால விடுமுறையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவது உண்டு. தமிழகத்தில் பள்ளிகளுக்கு அப்போது ஆண்டு விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் குடும்பமாக சுற்றுலா வருவதற்கு ஏற்ற இடமாக ஊட்டி விளங்குகின்றது.

மேலும், வட இந்தியாவில் இருந்து தசாரா பண்டிகை விடுமுறை, காலாண்டு விடுமுறையை செலவிடுவதற்கா இந்த சீசனில் மக்கள் ஊட்டிக்கு வருவார்கள். இதில், பெரும்பாலானோர் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயிலில் பயணித்து மகிழ்வார்கள்.

மேலும், மேட்டுப்பாளையம், வெலிங்டன், அர்வங்காடு, கேத்தி, லவ்டேல், குன்னூர் மற்றும் உதகமண்டலம் அல்லது ஊட்டி(UAM) போன்ற ஸ்டேஷன்களுடன் 46 கி.மீ தொலைவைக் கொண்ட மயக்கும் ஊட்டி நிலப்பரப்பு வழியாக 1908 இல் அமைக்கப்பட்டது இந்த மலை ரயில் பாதை. இந்த மலை ரயிலில் பயணிப்பதற்காகவே பெரும்பாலான மக்கள் ஊட்டிக்கு சுற்றுலா வருவதுண்டு.

இந்த மலை ரயிலின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரித்து, நீலகிரி மலை ரயில்வே யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக 2005-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 4.5 மணி நேரம் கொண்ட இந்த நிதானமான ரயில் பயணம் 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் மற்றும் 208 வளைவுகள் வழியாக 46 கி.மீ (மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை) செல்கிறது.

இந்த ரயில் பாதை கடல் மட்டத்தில் இருந்து 330 மீட்டர் உயரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து, 2200 மீட்டர் உயரத்திற்கு ஏறிச்சென்று ஊட்டியை அடைகிறது. இந்த ரயில்களில், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் முன்பதிவு செய்யப்படாத இருக்கைகள் உள்ளன. ஊட்டி ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருப்பதால் டிக்கெட்டுகளுக்கு எப்போதும் அதிக டிமாண்ட் உள்ளது.

மேலும், இந்தநிலையில் அடுத்து வரும் பண்டிகை உள்பட பல்வேறு காரணங்களால் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் மீண்டும் சிறப்பு மலை ரயிலை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலே மேட்டுப்பாளையம் - ஊட்டி இடைய டிக்கெட் அனைத்தும் முன்பதிவு ஆனது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், “மேட்டுபாளையம் - குன்னூர் இடையே முதல் வகுப்பில் 40 இருக்கைகளுடன் ரயில் இயக்கப்படும். குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் கூடுதலாக 40 இருக்கைகள் சேர்த்து என 80 இருக்கைகளுடனும், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகளுடனும் இயக்கப்படும்.

மேலும், ஊட்டி - மேட்டுபாளையம் இடையே வரும் 18-ஆம் தேதி, அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி), அக்டோபர் 22 மற்றும் 24ம் தேதி (விஜயதசமி) ஆகிய நாட்களில் காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20க்கு மேட்டுபாளையம் சென்றடையும்.

இதேப்போல், சுற்றுலா பயணிகளுக்கா சிறப்பு பயணம் செய்து மகிழ்ந்திடும் வகையில் ஊட்டி - கேத்தி - ஊட்டி இடையே 3 சுற்று வழி (Round Trip) ‘ஜாய் ரைட்’ என்னும் முறையில் சிறப்பு ரயில் வரும் 17-ஆம் தேதி மற்றும் அக்டோபர் 1-ஆம் தேதி ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் இயக்கப்படுகிறது. விடுமுறை கால சிறப்பு மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க முடியும்” என்று அதில் தெரிவிக்கபட்டிருந்தது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “எப்போதும், விடுமுறை காலங்களிலும், சீசன் காலங்களிலும், சிறப்பு மலை ரயில் இயக்குவது வழக்கம். இந்தாண்டுக்கான இரண்டாவது சீசன் துவங்க உள்ளது. மேலும், இனி வரும் நாட்களில், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு விடுமுறை தொடர்ந்து வருவதால், சிறப்பு மலை ரயில் சேவை இயங்கும் விவரங்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் சேவையானது செப்டமர் 17 மற்றும் 18-ஆம் தேதிகள் மற்றும் அக்டோபர் 1,‌ 2-ஆம் தேதி ஆகிய விடுமுறை நாட்களில் குன்னூரில் காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40க்கு ஊட்டி வந்தடையும். இதேபோல் ஊட்டியில் இருந்து செப்டம்பர் 16, 17, 30ஆம் தேதிகள் மற்றும் அக்டோபர் 1-ஆம் தேதிகளில் மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55க்கு குன்னூர் சென்றடையும். இதேப்போல், மேட்டுபாளையம் - ஊட்டி இடையே செப்டம்பர் மாதம் 16, 30 அக்டோபர் 21-ஆம் தேதி அக்டோபர் 23-ஆம் தேதி மேட்டுபாளையத்தில் காலை 9.10க்கு புறப்பட்டு மதியம் 2.45 மணிக்கு ஊட்டிக்கு வந்தடையும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி இருவர் உயிரிழப்பு - அரசுக்கு ஒத்துழைக்க பினராயி விஜயன் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details