தமிழ்நாடு

tamil nadu

பட்ஜெட்டில் சில துறைகளுக்கு முக்கியத்துவம் இல்லையா? அரசு விளக்கம்!

By

Published : Mar 22, 2023, 9:51 AM IST

2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சில துறைகளுக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக பரவிய தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

some departments have been allocated less funds information spread government has explained about the allocation funds
சில துறைகளுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது

சென்னை:தமிழ்நாடு அரசு 2023-2024 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை கடந்த 20 ஆம் தேதி தாக்கல் செய்தது. சில துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் அரசு தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 2023-24 ஆம் ஆண்டிற்கு 3,512.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் 4,281.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2022-23 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றிய அரசுடன் சேர்ந்து செயல்படுத்தும் ‘உயர்கல்வி உதவித் தொகை’ திட்டத்திற்கு, சுமார் 1,107 கோடி ரூபாய் ஒன்றிய அரசின் பங்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சென்ற ஆண்டு ஒன்றிய அரசு இத்திட்டத்தின் வழிமுறைகளை மாற்றி, அதன் பங்கை மாநில அரசிற்கு வழங்காமல், நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே செலுத்தும் என்று அறிவித்தது. எனவே, 2023-24 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கைப் பெற்று, உயர்கல்வி உதவித்தொகையை வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

ஒருவேளை சேர்த்திருந்தால், இந்த ஆண்டிற்கான ஒதுக்கீடு 4,352.19 கோடி ரூபாய் என கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய், புதிரை வண்ணார்கள் நல வாரியத்திற்கு 10 கோடி ரூபாய், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நீலகிரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான புதிய விடுதிகள் கட்ட 100 கோடி ரூபாய் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய ஒரு சிறப்புச் சட்டம் இயற்றப்படும்.

எரிசக்தித் துறைக்கு 2023-24 ஆம் ஆண்டில் 10,693.51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் 19,297.52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பு மானியமாக 13,108.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்த அரசு பொறுப்பேற்ற பின் மேற்கொண்ட சீர்திருத்தங்களால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்பு குறைந்து உள்ளது. எனவே, இழப்பு மானியத்திற்காக, 2023-24 ஆம் ஆண்டில் 1,523.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இது இந்த அரசின் திறமையான மேலாண்மையை எடுத்துக்காட்டுகிறது.

ஊரக வளர்ச்சித் துறைக்கு 2023-24 ஆம் ஆண்டில் 22,561.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில், 26,647.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2022-23 ஆம் ஆண்டில், உயிர் நீர் இயக்கத்திற்கு (ஜல் ஜீவன்) 3,000 கோடி ரூபாய் ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டது. ஜல் ஜீவன் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயல்படுத்துகிறது என்பதால், 2023-24 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செய்யப்பட்டது.

மேலும், இத்திட்டத்திற்கான ஒன்றிய அரசின் பங்கு நேரடியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கப்படுகிறது. இதை இரண்டும் கருத்தில் கொண்டால், இந்த ஆண்டு ஊரக வளர்ச்சித் துறைக்கான ஒதுக்கீடு சென்ற ஆண்டை விட அதிகமாக, 29,161.76 கோடி ரூபாய் என இருந்திருக்கும்.

அதாவது, 9.44 சதவீதம் அதிகமாக இருந்திருக்கும். எனவே இந்த வரவு-செலவுத் திட்டம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ளோருக்கும் நலிவுற்றோருக்கும் பெருமளவில் பயனளிக்கும் வரவு செலவுத் திட்டமாக அமைந்திருக்கிறது" என கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வேளான் தொழில் பெருந்தடம் திட்டம்

ABOUT THE AUTHOR

...view details